search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னை சத்தியவாணிமுத்து நூற்றாண்டை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்- அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்
    X

    அன்னை சத்தியவாணிமுத்து நூற்றாண்டை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்- அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

    • அன்னை சத்தியவாணி முத்து சுயமரியாதை இயக்கத்தில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர்.
    • ஆதிதிராவிட மக்களுடைய கல்வி மேம்பாட்டுக்காகவும், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவரான அன்னை சத்தியவாணி முத்து பிறந்தநாள் நூற்றாண்டு 2023 பிப்ரவரி 15-ம் நாள் ஆகும். அந்நாளை அரசு விழாவாகக் கடைபிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

    அன்னை சத்தியவாணி முத்து சுயமரியாதை இயக்கத்தில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர். அதன்பின்னர் 1949-ல் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய காலத்தில் இருந்தே பேரறிஞர் அண்ணாவோடு அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். 1957, 1967,1971 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தமிழ்நாட்டில் முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட இயக்கத்தைச் சேர்ந்த முதல் பெண்மணி அவர்தான். 1967-ல் பேரறிஞர் அண்ணா அமைச்சரவையிலும் அதன்பின்னர் 'சமத்துவப் பெரியார்' கலைஞரின் அமைச்சர வையிலும் அமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் பெண்மணியும் அவர்தான். 1979-ம் ஆண்டு சரண்சிங் பிரதமராக இருந்தபோது ஒன்றிய அமைச்சராகப் பொறுப்பேற்ற தமிழகத்தைச் சார்ந்த முதல் பெண்மணியும் அவரே ஆவார்.

    ஆதிதிராவிட மக்களுடைய கல்வி மேம்பாட்டுக்காகவும், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர். அன்னை என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியவர். தந்தை பெரியாரைப் போலவே புரட்சியாளர் அம்பேத்கரையும் தனது தலைவராக ஏற்றுப் போற்றியவர்.

    இத்தகைய பல்வேறு பெருமைகளைக்கொண்ட அன்னை சத்தியவாணி முத்துவின் பங்களிப்பைத் தமிழ்நாடு அரசு உரிய வகையில் அங்கீகரித்து அவரது நூற்றாண்டை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

    தமிழ்நாட்டில் மகளிர் கல்லூரி ஒன்றுக்கு அவரது பெயரை சூட்டவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×