search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி அருகே  நீரோடையை தூர்வாரி தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரம்
    X

    கோத்தகிரி அருகே நீரோடையை தூர்வாரி தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரம்

    • இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர்.
    • ஓடை முழுவதும் மண் அடைந்து, புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரி பகுதி மக்களுக்கு தேயிலை விவசாயமே பிரதானமான தொழிலாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர்.

    இவர்கள் மலை காய்கறிகள் மட்டுமின்றி ஏற்றுமதி தர வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளையும் பயிரிட்டு கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர்.

    கூக்கல்தொரை விவசாயிகள் உயிலட்டி நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் தண்ணீரையும், ஓடேன் ஓடையை நம்பி எரிசிபெட்டா, ஓடேன்துறை கிராம விவசாயிகளும், காக்காசோலை ஓடையை நம்பி அப்பகுதி விவசாயிகளும், குருகுத்தி ஓடையை நம்பி குருகுத்தி, காவிலோரை, நெடுகுளா விவசாயிகளும் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளாக இந்த ஓடைகள் உரிய முறையில் தூர் வாரப்படாததால், ஓடை முழுவதும் மண் அடைந்து, புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டது.

    மேலும் ஓடையை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

    இதனால் ஓடை சுருங்கியதுடன், மழை காலங்களில் மழை நீரை சேமித்து வைத்து கோடை காலங்களில் தண்ணீரை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்த ஓடைகளை தூர் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் நில அளவை செய்து, ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீரோடையை நன்கு தூர் வார முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு பணிகள் தொடங்கின.

    முதற்கட்டமாக நில அளவை செய்யபட்டு, விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்திருந்த அரசு நிலம் மீட்கப்பட்டது.தொடர்ந்து பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஓடேன் ஓடை, காக்கா சோலை ஓடை மற்றும் குருகுத்தி ஓடை ஆகியவை ஆழமாக தூர்வாரப்பட்டன.

    மேலும் ஓடைப் பராமரிப்பு திட்டத்தின் கீழ் காங்கிரீட்டாலான தடுப்புச் சுவர் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகள் நிறைவு பெற்றால் வரும் கோடை காலத்தில் விவசாயிகளுக்கு, விவசாயம் மேற்கொள்ள தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து வேளாண் பொறியியல் துறை உதவி கோட்ட பொறியாளர் பாலன் கூறியதாவது:-

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓடைகள் தூர் வாரப்படாமலும், ஆக்கிரமிப்பு செய்யபட்டு இருந்ததால், மழைக் காலங்களில் நீர் பெருக்கெடுத்து, அடிக்கடி தாழ்வான விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் சேதமாகி வந்தது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வந்தது.

    இதையடுத்து வேளாண் பொறியியல் துறை சார்பில் ஓடைகளை தூர் வார முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யபட்டு ஓடேன் ஓடையில் 2200 மீட்டர் நீளத்திற்கும், காக்கா சோலை ஓடையில் 1500 மீட்டர் நீளமும், குருகுத்தி ஓடையில் 2020 மீட்டர் நீளமும் தூர் வாரும் பணிகள் நடைபெற்றது.

    தற்போது ஓடை பராமரிப்பு நிதி திட்டத்தின் கீழ் ஓடையின் பக்கவாட்டில் தடுப்புச் சுவர்கள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் விரைவில் நிறைவு பெறும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×