search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து அடியோடு நின்றது
    X

    கோப்பு படம்

    முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து அடியோடு நின்றது

    • வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த சமயத்தில் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால் கடந்தமாதம் 142 அடி வரை நீர் மட்டம் உயர்ந்தது.
    • தற்போது அணைக்கு நீர் வரத்து முற்றிலும் நின்று விட்டதால் அணையின் நீர் மட்டம் மேலும் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கூடலூர்:

    தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் இந்த மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த சமயத்தில் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால் கடந்தமாதம் 142 அடி வரை நீர் மட்டம் உயர்ந்தது. அதன் பிறகு மழை படிப்படியாக குறைந்து முற்றிலும் நின்று விட்டது. அதே வேளையில் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணையின் நீர் மட்டம் உயர்த்தப்பட்டது.

    இதனால் முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்தது. தற்போது அணைக்கு நீர் வரத்து முற்றிலும் நின்று விட்டதால் அணையின் நீர் மட்டம் மேலும் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 133.80 அடியாக உள்ளது. நீர் வரத்து இல்லாத நிலையில் 633 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 3380 மில்லியன் கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து ஜூன் மாதம் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அணையின் நீர் மட்டம் 130 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். ஆனால் தற்போது நீர் மட்டம் சரிந்துள்ளதால் அதற்குள் கோடை மழை பெய்து நீர் மட்டம் உயருமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    வைகை அணையின் நீர் மட்டம் 55.54 அடியாக உள்ளது. வரத்து 502 கன அடி. திறப்பு 769 கன அடி. இருப்பு 2707 மி.கன அடி. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 46.36 அடி. வரத்து 38 கன அடி. திறப்பு 75 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 76.42 அடி. திறப்பு 25 கன அடி.

    Next Story
    ×