search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எந்திரங்களை சிறைபிடித்து கிராமமக்கள் போராட்டம்
    X

    கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்.

    எந்திரங்களை சிறைபிடித்து கிராமமக்கள் போராட்டம்

    • கடல் நீர் புகுந்து குடிநீர் ஆதாரமும், விவசாயமும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    • லாரியில் ஏற்றப்பட்டிருந்த மண்ணை மீண்டும் அங்கேயே கொட்டிச் செல்ல அறிவுறுத்தினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நெய்தவாசல் கிராமத்தில் தனியார் சவுடு குவாரி கடந்த இரு தினங்களாக இயங்கி வருகிறது.

    அரசின் கனிம–வளத்துறை, மாசுக்–கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற்ற நிலையில் ஊராட்சியின் அனுமதி பெறாமல் கிராம மக்களிடம் எவ்வித பேச்சுவார்த்தையையும் செய்யாமலும் கிராமத்தின் அருகிலேயே பல அடி ஆழத்திற்கு சவுடு மண் எடுத்து வருகின்றனராம்.

    இதனால் கடல் நீர் உட்புகும் ஆபத்து உள்ளதாக கூறுகின்றனர். ஏற்கனவே இப்பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிய நிலையில் எஞ்சிய பகுதிகளிலும் கடல் நீர் புகுந்து குடிநீர் ஆதாரமும், விவசாயமும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே இப்பகுதியில் சவுடு குவாரி இயங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து நெய்தவாசல், புதுகுப்பம், கடைக்காடு, மடத்துக்குப்பம், வடபாதி, தென்பாதி உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் சவுடுமண் குவாரியை தடுத்து நிறுத்தி லாரி மற்றும் மண் எடுக்க பயன்படுத்திய ஹிட்டாச்சி இயந்திரங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் லாரியில் ஏற்றப்பட்டிருந்த மண்ணை மீண்டும் அங்கேயே கொட்டிச் செல்லவும் அறிவுறுத்தினர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்கள் கிராமங்களை பாதுகாக்க கோரி தனியார் சவுடு குவாரியை தடை செய்ய வலியுறுத்த உள்ளதாகவும் அதுவரை சவுடு மண் குவாரி இயங்கக் கூடாது எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

    இதனை அடுத்து பேச்சுவார்த்தை நடத்திய பூம்புகார் போலீசார் மாவட்ட ஆட்சியரை கிராம மக்கள் சந்திக்கும் வரை மண் எடுக்க வேண்டாம் என சவுடு குவாரி தரப்பினரிடம் எச்சரித்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரையும் கலைந்து போக அறிவுறுத்தினர். லாரி மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்களை 7 கிராம மக்கள் சிறைபிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×