என் மலர்
உள்ளூர் செய்திகள்

காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்பவேண்டும்- ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
- ஊராட்சிகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
- அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அனைத்துப் பணியாளர் சங்கம் தெரிவிக்கிறது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கின்ற நிலையில், ஒன்பது மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிவடைந்துவிட்டது.
இந்த ஊராட்சிகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், ஆயிரக்கணக்கான ஊராட்சிகளில் செயலாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்ற ஓர் அவல நிலை நீடிக்கிறது.
ஒரு செயலாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளை கவனிக்கும் நிலை உள்ளதால், ஊராட்சிகளின் அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அனைத்துப் பணியாளர் சங்கம் தெரிவிக்கிறது. ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் மற்றும் தூய்மைப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






