search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோதனை சாவடியில் நேரடியாக பணம் செலுத்தி பர்மிட் பெறும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்
    X

    பணம் செலுத்தி பர்மிட் பெற காத்திருந்த வாகன ஓட்டிகளை படத்தில் காணலாம்.

    சோதனை சாவடியில் நேரடியாக பணம் செலுத்தி பர்மிட் பெறும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்

    • ஒரே நேரத்தில் பலர் ஆன்லைனை கையாள முனைவதால், சர்வர் பிரச்சினை ஏற்பட்டு, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பர்மிட் பெற முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.
    • தமிழகத்திற்குள் நுழைய முடியாமல், பல வாகனங்கள் மீண்டும் தங்கள் பகுதிக்கே திரும்பிச் செல்லும் அவலநிலை இருந்து வருகிறது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடியில் உள்ள அலுவலகத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக, வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள், நேரிடையாக பணம் செலுத்தி பர்மிட் பெறும் முறையை ரத்து செய்துவிட்டதாகவும், ஆன்லைனில் மட்டுமே பணம் செலுத்தி பர்மிட் பெற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதனை அறியாமல், கர்நாடகம், ஆந்திரா, புதுச்சேரி மற்றும் பல்வேறு வெளிமாநிலங்களிலிருந்து ஓசூர் வழியாக தமிழகத்திற்குள் நுழையும் கார்கள், லாரிகள், டூரிஸ்ட் வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களின் டிரைவர்கள், உரிமையாளர்கள், கால் கடுக்க பல மணிநேரம் சோதனைச்சாவடி அலுவலகத்தில் வரிசையில் காத்து நின்று ஏமாற்றமடையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும், சோதனைச்சாவடியிலேயே ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி, பர்மிட் பெறும் வசதி செய்யப்பட்டிருந்தாலும், ஒரே நேரத்தில் பலர் ஆன்லைனை கையாள முனைவதால், சர்வர் பிரச்சினை ஏற்பட்டு, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பர்மிட் பெற முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.

    இது தவிர, பெரும்பாலான லாரி டிரைவர்களுக்கு, செல்போனில் ஆன்லைன் முறையை கையாள்வது தெரியாத காரணத்தால் அவர்கள் தடுமாறி நிற்கும் சூழ்நிலையும் உள்ளது.

    இவ்வாறு ஆன்லைனிலும் பர்மிட் பெற முடியாமலும், நேரிடையாகவும் பர்மிட் பெற முடியாமலும் இக்கட்டான நிலை ஏற்பட்டு, தமிழகத்திற்குள் நுழைய முடியாமல், பல வாகனங்கள் மீண்டும் தங்கள் பகுதிக்கே திரும்பிச் செல்லும் அவலநிலை இருந்து வருகிறது.

    எனவே, ஆன்லைன் வசதி மட்டுமின்றி, நேரிடையாக பணம் செலுத்தி எளிதில் பர்மிட் பெறும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் டூரிஸ்ட் வாகனங்களை இயக்குபவர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×