search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊர், ஊராக காரில் சென்று நகை பறிப்பு- திருடிய பணத்தில் ஜாலியாக வாழ்ந்த ஒரே குடும்பத்தினர்
    X

    ஊர், ஊராக காரில் சென்று நகை பறிப்பு- திருடிய பணத்தில் ஜாலியாக வாழ்ந்த ஒரே குடும்பத்தினர்

    • நகையை பறித்தவுடன் அருகே எந்த பஸ் நிறுத்தம் வருகிறதோ அங்கு இறங்கி கொள்வார்.
    • இந்த குடும்பத்தினர் மீது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது

    கோவை

    கோவை மாநகரில் ஓடும் பஸ்ஸில் பெண்களை குறி வைத்து தொடர் நகை பறிப்பு சம்பவம் மற்றும் கோவில் திருவிழாக்களில் கூட்ட நெரிசலில் பயன்படுத்தி பெண்களிடம் செயின் பறித்து செல்லும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

    இதனை அடுத்து தொடர் செயின் பறிப்பில் ஈடுபடும் குற்றவாளிகளை குறி வைத்து பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் மாதவன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, நாகராஜ் மற்றும் போலீஸ்காரர்கள் உமா, கார்த்தி, பூபதி, ரங்கராஜ் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட தெலுங்கு பாளையம் தாமு நகரை சேர்ந்த நாகம்மாள்(48) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    நாகம்மாளின் சொந்த ஊர் மதுரை. இவரது கணவர் ராமு, மகன் சத்யா. இவர்கள் 3 பேரும் காரில் ஊர் ஊராகச் சென்று நகை கொள்ளை அடிப்பது வழக்கம்.

    நாகம்மாள் பஸ்சில் ஏறி பயணிகளுடன் பயணிகளாக பயணித்து, அருகில் இருக்கும் பெண்களிடம் நகையை பறித்து கொள்வார்.

    நகையை பறித்தவுடன் அருகே எந்த பஸ் நிறுத்தம் வருகிறதோ அங்கு இறங்கி கொள்வார். அவர் செல்லும் பஸ்சை பின்தொடர்ந்து அவரின் கணவர் அல்லது மகன் காரில் செல்வார்கள். பஸ் நிறுத்தத்தில் வைத்து காரில் ஏறி தப்பிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இப்படி பலரிடம் நகையை பறித்துள்ளனர்.

    இப்படி சம்பாதித்த பணத்தில் காந்திபுரம் பாரதியார் ரோட்டில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி அதனை தற்போது வாடகைக்கு விட்டுள்ளனர். மேலும் திருடிய பணத்தை கொண்டு மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளுக்கு சுற்றுலா சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.

    இந்த குடும்பத்தினர் மீது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சத்யாவின் மனைவி திருட்டு வழக்கில் கைதாகி கேரள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதையடுத்து போலீசார் நாகம்மாள் கொடுத்த தகவலின் பேரில் ராமு, சத்யாவையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். நாகம்மாளை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×