என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண் நிர்வாகி மீது மிளகாய் பொடி தூவி தாக்கியவர் கைது
- துரத்தி சென்ற ராஜேந்திரன் அவரை சரமாரியாக தலை, கை, உடல் ஆகிய இடங்களில் வெட்டியுள்ளார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேந்திரனை பிடித்து கைது செய்தனர்.
ஓசூர்,
தாலுகா அலுவலகம் முன்பு ஆன்லைன் சென்டர் நடத்தி வருபவர் கல்பனா (35) இவர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட மகளிரணி தலைவியாக உள்ளார். இவர் நடத்தி வரும் ஆன்லைன் சென்டர் கடையை ஓசூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் 10 லட்சம் ரூபாய் பணம் வாங்கி கொண்டு கல்பனாவுக்கு மேல் வாடகைக்கு விட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த கடை உரிமையாளர், ராஜேந்திரனை அழைத்து மேல் வாடகைக்கு விடக்கூடாது எனக்கூறி கடையை காலி செய்ய கூறினார்.
இதனையடுத்து ராஜேந்திரன், கல்பனாவிடம் கடையை காலி செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் கல்பனா கடையை காலி செய்ய முடியாது. தான் கொடுத்த 10 லட்சம் ரூபாயை திருப்பி தாருங்கள் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக கல்பனா அளித்த புகாரில் ராஜேந்திரன் மீது ஓசூர் டவுன் போலீசார் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்திருந்தனர்.
ராஜேந்திரனுக்கு கல்பனா மீது முன் விரோதம் இருந்த நிலையில் நேற்று அவர் கல்பனாவின் ஆன்லைன் சென்டருக்கு சென்றுள்ளார். அப்போது கல்பனா ராஜேந்திரனை உள்ளே வரக்கூடாது என கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், தான் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை அவர் முகத்தில் தூவி அவரை தாக்கியுள்ளார். பின்னர் அருகில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த ராஜேந்திரன் அவரை வெட்ட துரத்தியுள்ளார். அச்சமடைந்த கல்பனா அருகில் இருந்த ஒரு கடைக்குள் சென்று ஒளிந்து கொண்டார். அப்போது கல்பனாவின் ஆன்லைன் சென்டரில் இருந்த சொப்பட்டி கிராமத்தை சேர்ந்த முதியவர் நரசிம்மய்யா (65) என்பவர் ராஜேந்திரனிடம் ஏன் அந்த பெண்ணை தாக்குகிறாய் என கேட்டுள்ளார்.
ராஜேந்திரனுக்கும் நரசிம்மய்யாவுக்கும் ஏற்கனவே நிலம் சம்பந்தமான பிரச்சனை இருந்து வந்துள்ளது. அவர் மீது கடும் கோபத்தில் இருந்த ராஜேந்திரன் கத்தியை எடுத்து நரசிம்மய்யாவை தாக்கியுள்ளார்.
வெட்டுக்காயம் அடைந்த நரசிம்மையா தப்பித்துக் கொள்ள அங்கிருந்து அருகிலுள்ள காவலர் குடியிருப்புக்கு ஓடி உள்ளார். ஆனால் துரத்தி சென்ற ராஜேந்திரன் அவரை சரமாரியாக தலை, கை, உடல் ஆகிய இடங்களில் வெட்டியுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
இதுகுறித்து அறிந்த ஓசூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேந்திரனை பிடித்து கைது செய்தனர். வெட்டுக்காயம் அடைந்த நரசிம்மய்யாவை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக பெண் மீது மிளகாய் பொடி தூவி தாக்கி விட்டு, தடுக்க வந்தவரை அரிவாளால் வெட்டிய நபரால் தாலுகா அலுவலகம் மற்றும் போலீஸ் குடியிருப்பு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






