search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் புதுப்பிக்கப்பட்ட காமராஜர் பயன்படுத்திய கார் விருதுநகருக்கு அனுப்பி வைப்பு
    X

    கிருஷ்ணகிரியில் புதுப்பிக்கப்பட்ட காமராஜர் பயன்படுத்திய கார் விருதுநகருக்கு அனுப்பி வைப்பு

    • காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையை கட்டினார்.
    • கே.ஆர்.பி. அணை கட்டுமான பணி நடந்த போது இந்த காரில் வந்து தான் காமராஜர் அணையை பார்வையிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. காமராஜர் பயன்படுத்தி வந்த செவர்லெட் கார், சென்னை காமராஜர் அரங்கில் இருந்தது. அந்த கார் கடந்த மாதம் 1-ந் தேதி கிருஷ்ணகிரிக்கு கொண்டு வரப்பட்டது.

    தொடர்ந்து அந்த காருக்கான உதிரிபாகங்கள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, கார் புதுப்பிக்கப்பட்டது அந்த காரை கிருஷ்ணகிரியில் இருந்து காமராஜரின் சொந்த ஊரான விருதுநகருக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    இதற்காக காமராஜர் பயன்படுத்திய கார் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த அணை முன்பாக நிறுத்தப்பட்ட காரை செல்லகுமார் எம்.பி. கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

    இந்த கார் லாரி மூலமாக தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக விருதுநகருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இது குறித்து செல்லகுமார் எம்.பி. கூறுகையில், காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையை கட்டினார்.

    அவர் கே.ஆர்.பி. அணை கட்டுமான பணி நடந்த போது இந்த காரில் வந்து தான் காமராஜர் அணையை பார்வையிட்டார். அதை நினைவு கூறும் வகையில், காரை இங்கே கொண்டு வந்து, இங்கிருந்து வழி அனுப்பி வைத்துள்ளோம் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஸ்வரா ஜூவல்லரி அண்டு சில்க்ஸ் உரிமையாளர் எம்.பி. ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சில் ஜேசுதுரை, நகர தலைவர் லலித் ஆண்டனி, மாநில பொதுச் செயலாளர் அக.கிருஷ்ணமூர்த்தி, முபாரக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×