search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்வேறு சீரமைப்புடன் தஞ்சை ரெயில் நிலையம் மேம்படுத்தும் திட்டப்பணி தொடக்கம்
    X

    தஞ்சை ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் திட்ட பணிக்கான கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது.

    பல்வேறு சீரமைப்புடன் தஞ்சை ரெயில் நிலையம் மேம்படுத்தும் திட்டப்பணி தொடக்கம்

    • பிரதமர் மோடி தொடங்கி வைத்ததும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
    • தஞ்சை ரெயில் நிலையத்துக்கு மேம்படுத்தும் பணிக்காக முதல் கட்டமாக ரூ. 23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களை மறுசீரமைக்கும் திட்டத்தை மத்திய ரெயில்வே அமைச்சகம் தொடங்கி உள்ளது. இதன் ஒரு அங்கமாக அம்ரித் பாரத் ரெயில் நிலையங்கள் என்ற திட்டத்தின் கீழ் 1309 ரெயில் நிலையங்களை உலக தரத்திலான வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளது.

    அந்த வகையில் இந்தியா முழுவதும் முதல் கட்டமாக 508 ரெயில் நிலையங்களை அம்ரித் பாரத் ரெயில் நிலையங்கள் என்ற பெயரில் ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் மேம்படுத்தப்படுகிறது. இதில் தெற்கு ரெயில்வே நிலையங்களில் உள்ள 25 ரெயில் நிலையங்களும் அடங்கும்.

    தமிழகத்தில் முதல்கட்டமாக தஞ்சாவூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு. சேலம், தென்காசி உள்பட 18 ரெயில் நிலையங்கள் மற்றும் புதுச்சேரி ரெயில் நிலையம், கேரளா மாநிலத்தில் 5, கர்நாடகா மாநிலத்தில் மங்களூரு என 25 ரெயில் நிலையங்கள் முதல் கட்டமாக ரூ.616 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது.

    மேற்கூறிய ரெயில் நிலையங்கள் நவீன முறையில் மேம்படுத்தும் திட்ட பணியை இன்று காலை டெல்லியில் இருந்து காணொளி காட்சி வழியாக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

    இதற்காக அந்தந்த ரெயில் நிலையங்களில் மெகா திரையில் அடிக்கல் நாட்டு விழா நேரலையாக ஒளிப்பரப்பப்பட்டன.

    அதன்படி தஞ்சை ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் பணியை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இது ரெயில்வே நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மெகா திரையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டன.

    பிரதமர் மோடி தொடங்கி வைத்ததும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இந்த திட்டத்திற்கான கல்வெட்டும் திறந்து வைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், கல்யாண சுந்தரம், மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், பொன்மலை ரெயில்வே பணிமனை முதன்மை மேலாளர் ஷியாம்தர் ராம், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் , மாநகராட்சி கவுன்சிலர் மேத்தா, மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகள், காவிரி டெல்டா ரயில்வே பயணிகள் சங்கம் தலைவர் அய்யனாபுரம் நடராஜன், செயலாளர் வக்கீல் ஜீவகுமார், பொருளாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சை ரெயில் நிலையத்துக்கு மட்டும் மேம்படுத்தும் பணிக்காக முதல் கட்டமாக ரூ. 23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தஞ்சை ரெயில் நிலையம் முற்றிலும் சீரமைக்கப்படுகின்றன.

    தஞ்சை ரெயில் நிலையத்தில் ஆவின்பாலகத்திற்கு அருகே நவீன வசதிகளுடன் கழிவறை வசதி செய்யப்பட உள்ளது. தற்போது இருக்கக்கூடிய பார்சல் அலுவலகம் ரெயில் நிலையத்தின் பின்புற பகுதிக்கு மாற்றப்பட இருக்கிறது. பார்சல் அலுவலகம் இருந்த இடத்தில் பயணிகள் காத்திருப்போர் அறை குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட இருக்கிறது. கூடுதலாக உயர்நிலை நடைபாலம்,

    நுழைவு வாயில்கள் சீரமைப்பு, நடைமேம்பால மேற்கூரை, நகரும் படிக்கட்டுகள், மின் வினியோக வசதிகள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்படுகின்றன. தஞ்சை ரயில் நிலையம் புதுப்பொலிவு பெற உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×