search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருதுநகர் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை
    X

    விருதுநகர் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை

    • தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
    • பாறைப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சிவகாசி:

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

    அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, கிருஷ்ணன்கோவில், மகா ராஜபுரம், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று பகலில் லேசான சாரல் மழை பெய்த நிலையில் நள்ளிரவில் பலத்த மழையாக கொட்டியது. தொடர்ந்து விடிய, விடிய நீடித்த மழை இன்று காலை வரை தொடர்ந்தது. நகர் பகுதியில் தண்ணீர் தேங்காமல் வழிந்தோடியது. ராஜபாளையம் பகுதியில் பெய்த மழையால் ஆங்காங்கே குளம்போல் தண்ணீர் தேங்கியது.

    மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள அய்யனார்கோவில் ஆற்றில் வழக்கத்தைவிட தண்ணீர் வரத்து சற்று அதிகமாக இருந்தது. இதனால் ராஜபாளையம் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் 6-வது மைல் குடிநீர் தேக்கம் வேகமாக நிரம்பி வருகிறது.

    ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், லாரி, பேருந்து, சிற்றுந்து உள்ளிட்ட பெரிய வாகனங்கள் கூட தரைப்பாலத்தை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், நதிக்குடி, சுப்பிரமணியபுரம், மம்சாபுரம், இடையன்குளம், ரெங்கசமுத்திரப்பட்டி, புலிப்பாறைபட்டி, பாறைப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஆற்றில் வெள்ளம் வருவது தெரியாமல் அந்த வழியாக வந்த பெரும்பாலானோர் ஆற்றின் கரையில் கடந்து செல்ல முடியாமல் நின்றனர். தொடர்ந்து ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வருவதால், வேறு வழியின்றி மாற்றுப் பாதை வழியாக சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    மழை நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தொடர்வதால், தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காயல்குடி ஆறு வெம்பக்கோட்டை அருகே உள்ள வைப்பாற்றுடன் இணைகிறது. இதனால் வெம்பக்கோட்டை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    ஏற்கனவே வெம்பக்கோட்டை அணை நிரம்பிய நிலையில் தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வெம்பக்கோட்டை அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து மூன்று ஷட்டர்கள் திறக்கப்பட்டன. இதனால் அந்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெம்பக்கோட்டை மேம்பாலத்தின் அடிப்பகுதியில் வெள்ளம் சென்றதால் சுற்றுவட்டார பகுதியிலிருந்து மழையே பெய்யாமல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையளவு மில்லி மீட்டரில் விபரம் வருமாறு:-

    ராஜபாளையம்-38, ஸ்ரீவில்லிபுத்தூர்-50, சிவ காசி-105, பிளவக்கல்-58, வத்திராயிருப்பு-26.80, கோவிலாங்குளம்-9.20, வெம்பக்கோட்டை-52.40. மாவட்டம் முழுவதும் 343.40 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×