என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரூர் அருகே விவசாயி வீட்டில் ரூ.27.50 லட்சம்-நகை கொள்ளை
    X

    அரூர் அருகே விவசாயி வீட்டில் ரூ.27.50 லட்சம்-நகை கொள்ளை

    • தொடர் திருட்டால் அரூர் பகுதியில் பொதுமக்கள் பீதியில் உறைந்துபோயுள்ளனர்.
    • கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் அரூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள அச்சல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது46). இவர் கடந்த சிலநாட்களுக்கு முன்பு தனது விவசாய நிலத்தை விற்று விட்டார்.

    இதற்காக அவரிடம் இருந்து குமரேசன் ரூ.25 லட்சம் பணம் முன்தொகையாக வாங்கியிருந்தார். அந்த பணத்தை தனது தோட்டத்தில் உள்ள வீட்டில் வைத்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்று இவரது அக்கா வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் இருந்த ரூ.27.50 லட்சம் பணம் மற்றும் 9 பவுன் தங்க நகைகள் ஆகியவை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

    இது குறித்து குமரேசன் அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர்.

    இதைத்தொடர்ந்து குமரேசனின் வீட்டிற்கு தடவியல் நிபுணர்களை வரவழைக்கப்பட்டது. அவர்கள் கொள்ளையர்களின் கைரேகைகள் எதுவும் பதிவாகி உள்ளதா? என சோதனை செய்தனர்.

    மேலும் அங்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மர்ம நபர்கள் தங்களை மோப்பநாய் அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க மிளகாய் பொடி தூவி விட்டு சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது. இதனால் மோப்ப நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இந்த சம்பவம் குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று கடந்த 3 நாட்களுக்கு முன்பு அச்சல்வாடி கிராமத்தில் வெங்கட்ராமன் வீட்டில் ரூ.7 ஆயிரம் பணமும், மொட்டச்சி வீட்டில் முக்கால் பவுன் நகையும், கண்ணகி வீட்டில் ரூ.10 ஆயிரமும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். தொடர் திருட்டால் அரூர் பகுதியில் பொதுமக்கள் பீதியில் உறைந்துபோயுள்ளனர்.

    கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் அரூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×