என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருமாவளவன் மணிவிழா நிறைவு கொண்டாட்டம்: சென்னையில் இன்று மாலை நடக்கிறது
- சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் மாலை 3 மணிக்கு முதல் நிகழ்ச்சி தொடங்குகிறது.
- திருமாவளவன் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடி வந்த நிலையில் இன்று மணிவிழா நிறைவு விழா நடக்கிறது.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நாளை (17-ந்தேதி) 61-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
கடந்த ஆண்டு மணி விழாவை (60 வயது) கண்ட அவருக்கு ஒரு வருடம் முழுவதும் விழாக்களை கட்சி தொண்டர்கள் நடத்தி வந்தனர்.
ஏழை-எளிய மக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கி திருமாவளவன் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடி வந்த நிலையில் இன்று மணிவிழா நிறைவு விழா நடக்கிறது.
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் மாலை 3 மணிக்கு முதல் நிகழ்ச்சி தொடங்குகிறது. வாழ்த்தரங்கத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு தலைமை தாங்கி மலர் வெளியிடுகிறார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முன்னிலை வகித்து விழா மலரை பெறுகிறார். நடிகர் சத்யராஜ், கவிஞர்கள் அறிவுமதி, பழனி பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர்கள் சிந்தனை செல்வன், துரை.ரவிக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். முடிவில் திருமாவளவன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.
விழாவையொட்டி மாலை 3 மணிக்கு இசை அரங்கம் நடக்கிறது. பின்னர் நடக்கும் கவியரங்கத்திற்கு திரைப்பட பாடலாசிரியர் கபிலன் தலைமை தாங்குகிறார்.
துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு வரவேற்கிறார். கவிஞர் காசி முத்து மாணிக்கம் தொடக்க உரையாற்றுகிறார். கவிஞர்கள் தமிழ் மணவாளன், ரவிக்குமார், தனிக்கொடி, தஞ்சை இனியன், தேன் மொழிதாஸ், அருண்பாரதி ஆகியோர் கவிப்பொழிவு நிகழ்த்துகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை தலைமை நிர்வாகிகள் உஞ்சை அரசன், ஏ.சி.பாவரசு, தமிழ்செல்வன், இளஞ்சேகுவாரோ, பால சிங்கம் மற்றும் சென்னை மாவட்ட செயலாளர்கள் வக்கீல் பி.சாரநாத், பா. வேலுமணி, சேத்துப்பட்டு கோ.இளங்கோ, சைதை ஜேக்கப், வேளச்சேரி இளையா, கரிகால் வளவன், வழக்கறிஞர் அப்புன், சவுந்தர், இளங்கோவன், உஷாராணி, தேவ.ஞான முதல்வன் ஆகியோர் ஒருங்கிணைத்துள்ளனர்.
மணி விழா நிறைவு விழாவில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தையினர் திரள்கிறார்கள்.






