என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலங்கையில் இருந்து ரப்பர் படகில் வேதாரண்யத்துக்கு தப்பி வந்த போலந்து நாட்டை சேர்ந்தவர் கைது
    X

    இலங்கையில் இருந்து ரப்பர் படகில் வேதாரண்யத்துக்கு தப்பி வந்த போலந்து நாட்டை சேர்ந்தவர் கைது

    • வேதாரண்யம் அடுத்த முணங்காட்டு பகுதியில் ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கியது.
    • ஆறு காட்டுத்துறையில் இருந்து சந்தேகப்படும் படியான நபர் ஒருவர் நடந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த முணங்காட்டு பகுதியில் ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கியது.

    இது குறித்த தகவலின் பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் மற்றும் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் படகை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் ஆறு காட்டுத்துறையில் இருந்து சந்தேகப்படும் படியான நபர் ஒருவர் நடந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் அந்த நபரை கைது செய்து வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் போலந்து நாட்டை சேர்ந்த வாத்திஸ்வாப் (வயது 40) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தது.

    வாத்திஸ்வாப்போலந்து நாட்டில் இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கையை சுற்றிப்பார்க்க வந்துள்ளார். இலங்கையில் குடிபோதையில் அடிதடி வழக்கில் சிக்கி 3 நாள் ஜெயிலில் இருந்து பின்பு 2000 டாலர் அபராத தொகை கட்டி வெளியில் வந்துள்ளார். ஆனால் இவர் மீது உள்ள வழக்கை முடித்து நாடு திரும்ப வேண்டும் எனஇலங்கை அரசாங்கம் இவரது பாஸ்போர்ட்டை முடக்கியுள்ளது. இதனால் 2 ஆண்டுகளாக இலங்கையிலேயே சுற்றி திரிந்துள்ளார்.

    பின்பு சொந்த நாடு செல்வதற்கு முயற்சி செய்து ரூ.1 லட்சம் கொடுத்து சீனாவில் தயாரான ரப்பர் படகை வாங்கி அதில் இலங்கை யாழ்பாணத்தில் இருந்து கடல் வழியாக தமிழக கோடியக்கரைக்கு தப்பி வந்துள்ளார்.

    தொடர்ந்து படகை முணங்காட்டில் விட்டு விட்டு அங்கிருந்து சுமார் 3 கி.மீ தூரம் உள்ள ஆறு காட்டுதுறைக்கு நடந்தே வந்து அங்கு உள்ள கருவைதோப்பில் படுத்து உறங்கி விட்டார். அங்கிருந்து சென்னை செல்ல விசாரித்த போது போலீசாரிடம் மாட்டி உள்ளார்.

    இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து பேக்கை சோதனையிட்டு அதில் இருந்த சிறிய கத்தி போன், வாட்டர் பாட்டில், கூலிங் கிளாஸ், பிஸ்கட் ,செல் சார்ஜர், பவர் பேங்க், டார்ச் லைட், பேட்டரி செருப்பு உள்ளிட்ட பொருட்கள் இருந்ததை கைப்பற்றினர். மேலும் அனைத்து பணபரிமாற்றமும் போன் மூலம் செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

    இன்று காலை மத்திய உளவுதுறை போலீசார் வாத்திஸ்வாப்பிடம் விசாரணை நடத்தினர். இலங்கையில் தங்கியிருந்ந யார் உதவி செய்தார்கள்? 2 ஆண்டுகள் அங்கு இருக்க பணம் யார் மூலம் வந்தது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்டனர்.

    விசாரணையின் முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை அமையும். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×