என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எர்ணாகுளம்- வேளாங்கண்ணி ரெயிலின் புதிய அட்டவணையால் அதிர்ச்சிக்குள்ளான தென்காசி மாவட்ட மக்கள்
    X

    எர்ணாகுளம்- வேளாங்கண்ணி ரெயிலின் புதிய அட்டவணையால் அதிர்ச்சிக்குள்ளான தென்காசி மாவட்ட மக்கள்

    • புதிய ரெயில் சேவை அடுத்த மாதம் 25-ந்தேதி முதல் எர்ணாகுளத்தில் இருந்தும், 26-ந்தேதி முதல் வேளாங்கண்ணியில் இருந்தும் தனது இயக்கத்தை தொடங்குகிறது.
    • தென்காசி சந்திப்பு ரெயில் நிலையம் நெல்லை-கொல்லம், விருதுநகர்-கொல்லம் ரெயில் வழித்தடத்தில் அமைந்துள்ள மிக முக்கியமான சந்திப்பு ரெயில் நிலையம் ஆகும்.

    தென்காசி:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வாரந்தோறும் 2 முறை சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அந்த ரெயில் மற்றும் மதுரை-குருவாயூர் தினசரி எக்ஸ்பிரஸ், பாலக்காடு-நெல்லை இடையேயான பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு என 3 ரெயில்களுக்கு ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

    ஆனால் அதில் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரெயிலுக்கு தென்காசியில் நிறுத்தம் கிடையாது என்ற அறிவிப்பு தென்காசி மாவட்ட மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே வாரியம் அளித்துள்ள ஒப்புதலின்படி, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாரம் இருமுறை ரெயில் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு செங்கோட்டை வந்து மறுநாள் காலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.15 மணிக்கு செங்கோட்டை வந்து மதியம் 12 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.

    இந்த ரெயில் கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், காயங்குளம், கொல்லம், கொட்டாரக்கரை, புனலூர், செங்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் நிறுத்தங்களில் நின்று செல்லும் என்று அறிவித்துள்ளது.

    இந்த புதிய ரெயில் சேவை அடுத்த மாதம் 25-ந்தேதி முதல் எர்ணாகுளத்தில் இருந்தும், 26-ந்தேதி முதல் வேளாங்கண்ணியில் இருந்தும் தனது இயக்கத்தை தொடங்குகிறது. இந்த சிறப்பு ரெயில்கள் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் ரெயில் நிலையங்களில் தற்போது நின்று சென்று கொண்டிருக்கும் நிலையில் நிரந்தர ரெயிலாக இயங்க இருக்கும் நிலையில், தென்காசி நிறுத்தம் நீக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து தென்காசி மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத்தினர் கூறுகையில், மதுரை ரெயில்வே கோட்டத்தில் தென்காசி ரெயில் நிலையம் ரூ.20 கோடிக்கு மேல் வருமானம் கொடுத்து 8-வது இடத்தை அடைந்துள்ளது. மேலும் பயன்பாட்டில் 24 லட்சம் பயணிகளுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளது. தென்காசி சந்திப்பு ரெயில் நிலையம் நெல்லை-கொல்லம், விருதுநகர்-கொல்லம் ரெயில் வழித்தடத்தில் அமைந்துள்ள மிக முக்கியமான சந்திப்பு ரெயில் நிலையம் ஆகும்.

    கடந்த முறை எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் தென்காசியில் நிற்காது என்று அறிவித்த தெற்கு ரெயில்வே பயணிகளின் போராட்டத்தை தொடர்ந்து மீண்டும் வழங்கியது. எனவே தென்காசி ரெயில் நிறுத்தம் வழங்காவிட்டால் பயணிகள் அனைவரும் போராட்டம் நடத்துவோம். எனவே தெற்கு ரெயில்வே உடனடியாக தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் ரெயில் நிறுத்தங்களை உடனே அறிவிக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×