search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே யானை மிதித்து தாக்கியதில் காவலாளி மரணம்
    X

    தேனி அருகே யானை மிதித்து தாக்கியதில் காவலாளி மரணம்

    • யானை தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்திருப்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
    • வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு யானை ஊருக்குள் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள பல்லவராயன்பட்டியை சேர்ந்தவர் முருகன்(47). இவர் பண்ணைப்புரத்தில் உள்ள செல்லம் என்பவரது தென்னந்தோப்பில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். வழக்கமாக இரவு நேர காவலுக்கு சென்றுவிட்டு காலையில் வீடு திரும்புவது வழக்கம்.

    அதன்படி இன்றுகாலை வெகுநேரமாகியும் முருகன் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்து அவரது குடும்பத்தினர் தோட்டத்திற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது முருகன் பலத்த ரத்தகாயங்களுடன் இறந்துகிடந்துள்ளார்.

    அவரை யானை மிதித்து கொன்றதற்கான தடயங்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கும், கோம்பை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் முருகன் யானை தாக்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து யானையின் கால் தடங்களை வைத்து ஒரு யானை வந்ததா அல்லது 2 யானைகள் வந்ததா என விசாரித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் ஏற்கனவே கடந்த காலங்களில் ஒற்றை யானை, மக்னா யானை ஆகியவை அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதுடன் ஏராளமான உயிர்களையும் காவு வாங்கியது. இதனையடுத்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு மக்னா யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததால் மீண்டும் கும்கி யானைகள் திருப்பி அனுப்பி விடப்பட்டன.

    தற்போது மீண்டும் யானை தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்திருப்பது இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எனவே வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு யானை ஊருக்குள் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உயிரிழந்த முருகனுக்கு பிரியா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    Next Story
    ×