என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆத்தூரில் வாலிபரை தாக்கி ரூ.4½ லட்சம், 20 பவுன் கொள்ளை
- ஆத்தூரில் வாலிபரை தாக்கி முகமூடி கும்பல் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம், ஆத்தூர் 17-வது வார்டு வக்கீல் கிட்ட முஸ்தபா தெருவை சேர்ந்தவர் எலக்ட்ரீஷியன் நியாஸ் ( வயது 48). இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது மகன் சையது அஸ்லாம் (18). இவர், நேற்றிரவு தனது நண்பரான சுல்தான் என்பவருடன் சேர்ந்து வீட்டில் டிவி பார்த்துக் கொண்டு இருந்தார். இருவரும் டீ குடிக்க வெளியே சென்றனர். பின்னர் மீண்டும் வீடு திரும்பியபோது, முகமூடி அணிந்த 3 பேர் வீட்டில் இருந்து வெளியே வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அவர்களை சையது அஸ்லாம் பிடிக்க முயற்சித்தார். அப்போது அந்த மர்மநபர்கள், திடீரென அஸ்லாமை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இதையடுத்து அஸ்லாம் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, 2 அறைகளில் இருந்த 2 பீரோவையும் உடைத்திருந்த மர்மநபர்கள், அதிலிருந்த ரூ.4.50 லட்சம், 20 பவுன் நகைகள், 1 1/2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஆத்தூர் நகர போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆத்தூரில் வாலிபரை தாக்கி முகமூடி கும்பல் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






