என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராஜபாளையத்தில் ரவுடி கத்தியால் குத்திக்கொலை- 3 பேருக்கு வலைவீச்சு
- பல்வேறு சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டனர்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடி வருகிறார்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் காமராஜர் முதல் தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி முனீஸ்வரி. இவர்களது மகன் பாண்டிகாளி (வயது22). இவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ராஜபாளையத்தை அடுத்துள்ள தெற்கு மலையடிப்பட்டியில் குடும்பத்துடன் வீடெடுத்து தங்கினர். இந்த நிலையில் பாண்டிகாளி அவரது தாய்மாமன் காளீஸ்வரன் ஆகியோர் மது குடித்து வந்தது அப்பகுதி மக்களிடம் பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காளீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பாண்டிகாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
நேற்று ராஜபாளையம் கோர்ட்டில் வழக்கிற்காக ஆஜராகிவிட்டு காளீஸ்வரன், பாண்டிகாளி ஆகியோர் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது ராஜபாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் (22), ஈஸ்வரன் (30), சுந்தர்ராஜ் (25) ஆகிய 3 பேர் பாண்டிகாளி, காளீஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த 3 பேரும் பாண்டிகாளியை சரமாரியாக தாக்கினர். மேலும் கத்தியாலும் குத்தப்பட்டதாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டிகாளி இறந்தார். இதுகுறித்து முனீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடி வருகிறார்.






