என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் இன்று காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
- பொது மக்களுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
- ஈரோட்டுக்கு வந்த வாகனங்கள் சாலையின் இரு புறம் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி 1-வது மண்டலத்தில் உள்ள 6-வது வார்டில் ஞானபுரம், பச்சைபாளிமேடு பகுதி உள்ளது. இங்குள்ள நூற்றுக்கணக்கான பொது மக்களுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. 3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. அதுவும் தண்ணீர் மிகக்குறைந்த நேர அளவிலேயே திறந்து விடப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து 3 வாரத்திற்கு மேல் இதேநிலை நீடித்ததால் பகுதி சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் இன்று காலை திடீரென கனிராவுத்தர் பகுதியில் உள்ள ஈரோடு-சக்தி மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் போட்டனர். இதன் காரணமாக ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வாகனங்கள், அதேபோல் சத்தியமங்கலம், கோபியில் இருந்து ஈரோட்டுக்கு வந்த வாகனங்கள் சாலையின் இரு புறம் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
இது குறித்து தகவல் அறிந்த வீரப்பன்சத்திரம் போலீசார், தாசில்தார் ஜெயக்குமார், வார்டு கவுன்சிலர் தமிழ்பிரியன் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதியில் கடந்த 3 வாரமாக சீரான குடிநீர் வராததால் பல்வேறு வகையில் அவதி அடைந்து வருகிறோம். எனவே சீரான முறையில் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அப்போது குடிநீர் விநியோகிக்கப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதில் பிரச்சனை இருப்பதாகவும், தற்போது தான் அது குறித்து தெரிய வந்துள்ளதாகவும், உடனடியாக அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதைஏற்று பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






