search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் சொத்து வரி உயர்வு- 13 லட்சம் குடியிருப்புகளுக்கு நோட்டீசு அனுப்பப்படுகிறது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சென்னையில் சொத்து வரி உயர்வு- 13 லட்சம் குடியிருப்புகளுக்கு நோட்டீசு அனுப்பப்படுகிறது

    • சென்னையில் 13 லட்சத்து 6 ஆயிரத்து 777 குடியிருப்புகள் உள்ளன.
    • அதன் உரிமையாளர்களுக்கு சொத்து வரி உயர்வு தொடர்பான நோட்டீசு அடுத்த வாரம் முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையில் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக கடந்த 30-ந்தேதி நடந்த சென்னை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதன்படி சென்னையில் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதற்காக சொத்து உரிமையாளர்களுக்கு படிவம் 6 நோட்டீசை சென்னை மாநகராட்சி வழங்க உள்ளது.

    படிவம் 6-ல் கட்டிடங்களின் அளவு, பரப்பளவு, தெரு, திருத்தப்பட்ட வரித்தொகை இடம்பெற்றிருக்கும்.

    சென்னையில் 13 லட்சத்து 6 ஆயிரத்து 777 குடியிருப்புகள் உள்ளன. அதன் உரிமையாளர்களுக்கு சொத்து வரி உயர்வு தொடர்பான நோட்டீசு அடுத்த வாரம் முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.

    இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது:-

    சொத்து வரி உயர்வு தொடர்பான நோட்டீசு வருகிற 13 அல்லது 14-ந்தேதி முதல் அச்சடித்து வினியோகம் செய்யப்படும். ஒவ்வொரு சொத்துக்களும் தனித்தனி நோட்டீசு இருக்கும். மொத்தம் 13 லட்சத்துக்கும் அதிகமான நோட்டீசுகளை ஒன்றுக்கொன்று வித்தியாசமாக அச்சிட உள்ளோம்.

    உரிமையாளர்கள் பெயர், பில் எண் மற்ற விவரங்கள் நோட்டீசில் சேர்க்கப்படும். சொத்து உரிமையாளர்கள் புதிய வரி விகிதம், சொத்தின் அளவு ஆகியவற்றின் முரண்பாடுகளை கண்டறிந்தால் மேல்முறையீடு செய்ய 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

    ஏற்கனவே இருந்த மாநகராட்சி பகுதிகளில் 600 சதுர அடி வரையிலான குடியிருப்புகளுக்கு 150 சதவீதம் வரி உயர்த்தப்படுகிறது. விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சி பகுதிகளில் 600 சதுர அடி வரையிலான குடியிருப்புகளுக்கு 125 சதவீதம் வரி உயர்த்தப்படுகிறது.

    இதே போல் 601 சதுர அடி முதல் 1200 சதுர அடி வரையிலான குடியிருப்புகளுக்கு வரி உயர்வு 175 மற்றும் 150 சதவீதமாக இருக்கும்.

    1201 சதுர அடி முதல் 1800 சதுர அடி வரையிலான குடியிருப்புகளுக்கு 200 மற்றும் 175 சதவீதம் வரி உயர்வு இருக்கும். 1801 சதுர அடிக்கு மேல் உள்ள குடியிருப்புகளுக்கு 250 சதவீதம் மற்றும் 200 சதவீத அளவுக்கு வரி உயரும்.

    சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள் ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளாக இருந்த போது சொத்து வரி உயர்த்தப்பட்டது. எனவே அங்கு சொத்து வரி உயர்வு குறைவாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×