என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சமூக வலைதளம் மூலம் பழகிய வாலிபரை சந்திக்க மதுரை வந்த சென்னை சிறுமியை மீட்ட போலீசார்
  X

  சமூக வலைதளம் மூலம் பழகிய வாலிபரை சந்திக்க மதுரை வந்த சென்னை சிறுமியை மீட்ட போலீசார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெற்றோருக்கு தெரியாமல் தனியாக வரக்கூடாது என்று சிறுமிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
  • பஸ் நிலையத்தில் தனியாக நின்ற சிறுமியை கண்டறிந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

  மதுரை:

  மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் கடந்த 17-ந் தேதி அதிகாலை நேரத்தில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அந்த சிறுமியை அழைத்து விசாரணை நடத்தினர்.

  அப்போது அவர் சென்னையை சேர்ந்தவர் என்பதும், சமூக வலைதளம் மூலம் பழகிய ஒரு வாலிபரை பார்ப்பதற்காக தனியாக மதுரை வந்திருப்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரித்த போது, கடந்த ஒரு வருடமாக அந்த வாலிபரிடம் ஷேர்சாட் மூலம் பழகி வந்ததாகவும், அவரை பார்க்க பெற்றோருக்கு தெரியாமல் வந்ததாகவும் தெரிவித்தார்.

  சிறுமி கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் மேலும் விசாரணை நடத்தியதில், அவர் மாயமானது குறித்து அவரது பெற்றோர் சென்னை பாண்டி பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருப்பதும் தெரிய வந்தது.

  இதையடுத்து சென்னை போலீசார் உதவியுடன் சிறுமியின் பெற்றோர் மதுரைக்கு வந்தனர். பின்பு பெற்றோருக்கு தெரியாமல் இப்படியெல்லாம் தனியாக வரக்கூடாது என்று சிறுமிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

  பஸ் நிலையத்தில் தனியாக நின்ற சிறுமியை கண்டறிந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர். இதுகுறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறியதாவது:-

  தற்போதைய அறிவியல் வளர்ச்சியின் காரணமாக செல்போன் மற்றும் கணினி போன்ற சாதனங்களால் அனைவரும் அனைத்தும் எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் அந்த சாதனங்கள் மூலம் பயன்படுத்தும் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் முகம் தெரியாத நபர் மூலம் அறிமுகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

  எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கைப்பேசி மற்றும் கணினி ஆகியவற்றை பயன்படுத்த கொடுக்கும்போது அவ்வப்போது அவர்களை கண்காணிக்க வேண்டும். அவர்கள் தேவையில்லாத நபர்களுடன் தொடர்பு கொள்வது தெரியவந்தால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை எடுத்துக்கூற வேண்டும்.

  மேலும் அவர்கள் பயன்படுத்தும் செயலிகள் மூலம் யாரேனும் அவர்களுக்கு பாலியல் தொந்தரவு செய்கிறார்களா? என்பதையும் விசாரிக்க வேண்டும். அந்த செயலிகள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வது தெரியவந்தால் உடனே போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும்.

  இது தவிர போலீஸ் செயலியான எஸ்.ஓ.எஸ்., சிறப்பு கட்டுப்பாட்டு அறை எண் 1098, 1091, 181 மற்றும் மதுரை மாநகர் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 0452-2530070, 2530100, வாட்ஸ்அப் எண் 83000 21100 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×