search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ம.க. மாவட்ட செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
    X

    பா.ம.க. மாவட்ட செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

    • சத்யநாராயணனின் வீட்டுக்கு வந்த மர்ம கும்பல் அவரது வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டை வீசினர்.
    • பா.ம.க. மாவட்ட செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராயபுரம்:

    பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவை சேர்ந்தவர் சத்யநாராயணன்.பா.ம.க. வடசென்னை மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது மகன் நிஷால். தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று இரவு நிஷால் காசிமேடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் திடீரென நிஷாலை வழிமறித்து கத்தி, அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நிஷால் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பினார். இதையடுத்து மர்ம கும்பல் அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து நிஷால் தனது தந்தை சத்யநாராயணனிடம் தெரிவித்தார். அவர் மர்ம கும்பல் குறித்து காசிமேடு போலீசில் புகார் அளித்தார்.

    அந்த நேரத்தில் சத்யநாராயணனின் வீட்டுக்கு வந்த மர்ம கும்பல் அவரது வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டை வீசினர். இதில் பெட்ரோல் குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பற்றியது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததும் மர்ம கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். பெட்ரோல் குண்டு வீச்சில் அதிர்ஷ்டவசமாக சத்யநாராயணனின் வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி அறிந்ததும் காசிமேடு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சத்யநாராயணனின் வீட்டு முன்பு பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று அப்பகுதியில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக நிஷாலுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது.

    இது பற்றி சத்யநாராயணன் போலீசில் புகார் அளித்து பின்னர் சமாதானம் செய்து முடித்து உள்ளனர். இந்த தகராறில் கொலை முயற்சி மற்றும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்து உள்ளது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்து போலீசார் மேலும் விசாரித்து வருகிறார்கள்.

    பா.ம.க. மாவட்ட செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே இதே கும்பல் ராயபுரம் மஸ்தான் கோவில் தெருவில் வந்த போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் நவீன், தினேஷ் ஆகியோரிடமும் மோதலில் ஈடுபட்டு அவரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் இருவரும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    Next Story
    ×