search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே கோவில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் உடல் கருகி பலி
    X

    பண்ருட்டி அருகே கோவில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் உடல் கருகி பலி

    • கோவிலில் இருந்து 4 சாமிகளின் வீதிஉலா நடைபெற்றது.
    • படுகாயம் அடைந்த திருமுருகன், ராஜேசை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுதொண்டமாதேவி பகுதியில் புகழ்பெற்ற முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் 10 நாள் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டும் கோவிலில் ஆடிமாத பிரம்மோற்ச விழா கடந்த 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி விமர்சையாக நடந்து வருகிறது. முன்னதாக விழாவில் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிலையில் விழா தொடங்கிய ஒவ்வொரு நாளும் இரவில் கோவிலில் இருந்து அங்காளம்மன், அய்யனார், முத்தாலம்மன், முருகன், உள்ளிட்ட சாமிகள் 4 வாகனங்களில் ஊரை சுற்றி வலம்வரும் வீதிஉலா நடக்கும்.

    அதேபோல் நேற்று இரவு கோவிலில் இருந்து 4 சாமிகளின் வீதிஉலா நடைபெற்றது. இதில் கோவில் நடுத்தெருவில் இருந்து வீதிஉலா தொடங்கி 3 சாமிகள் தேர்களில் வடக்கு தெரு பகுதிக்கு வந்தன. கடைசியாக 4 வதாக வந்த தேர் சாலை ஓரத்தில் தாழ்வாக சென்ற மின்சார கம்பியில் எதிர்பாராதவிதமாக உரசியது. உடனே தேரில் மின்சாரம் பாய்ந்து அதிலிருந்த 3 பேர் தூக்கி வீசப்பட்டனர். தூக்கி வீசப்பட்டதில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் கோகுல கிருஷ்ணன் (வயது 17) உடல் கருகி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். மேலும் வேல்முருகன் மகன் திருமுருகன், ஜானகிராமன் மகன் ராஜேஷ் ஆகியோர் பலத்த படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தேரில் மின்சாரம் தாக்கி இறந்த கோகுல கிருஷ்ணணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் படுகாயம் அடைந்த திருமுருகன், ராஜேசை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று முத்தாலம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடைபெற இருந்த நிலையில் நேற்று நடந்த வீதிஉலா நிகழ்ச்சியில் தேரில் மின்சாரம் பாய்ந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×