என் மலர்
உள்ளூர் செய்திகள்

விடுமுறை கொடுக்காததால் மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறி வடமாநில தொழிலாளி போராட்டம்
- டிரான்ஸ்பார்மரின் உச்சியில் நின்று கொண்டு கீழே வரமறுத்த மகேந்திராவை பெரிய ஏணியை பயன்படுத்தி பத்திரமாக மீட்டு பரமத்தி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- பரமத்திவேலூர் பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்ததால் மின்சாரம் இல்லாததை அறிந்தே டிரான்ஸ்பார்மரில் ஏறி மகேந்திரா போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த யாதவ் என்பவரின் மகன் மகேந்திரா (வயது 18) என்பவர் கடந்த ஒரு மாதமாக நூற்பாலையில் உள்ள குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
மகேந்திரா, தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக நூற்பாலையில் உள்ள நிர்வாகத்தினரிடம் விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் நூற்பாலை நிர்வாகத்தினர் வேலைக்கு வந்து ஒரு மாதமே ஆனதால் விடுமுறை தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த மகேந்திரா, நூற்பாலை அருகே உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரின் உச்சியில் ஏறி மேலே சென்று விடுமுறை தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை பார்த்த நூற்பாலை நிர்வாகத்தினர் கீழே இறங்கி வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என கூறினர். ஆனால் டிரான்ஸ்பார்மரில் இருந்து அவர் கீழே இறங்க மறுத்ததால் பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் நாமக்கல் தீயணைப்பு துறையினர், மின்வாரியத்தினர் அங்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் நடத்திய இந்த பேச்சுவார்த்தையால் சமாதானம் அடைந்தார்.
இதையடுத்து டிரான்ஸ்பார்மரின் உச்சியில் நின்று கொண்டு கீழே வரமறுத்த மகேந்திராவை பெரிய ஏணியை பயன்படுத்தி பத்திரமாக மீட்டு பரமத்தி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
நேற்று பரமத்திவேலூர் பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்ததால் மின்சாரம் இல்லாததை அறிந்தே டிரான்ஸ்பார்மரில் ஏறி மகேந்திரா போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
பரமத்தி போலீசார் மகேந்திராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






