என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம்
- கவுதமின் சகோதரர் யோசுவா எப்படியாவது சந்தியாகுவை கொலை செய்ய வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டி வந்துள்ளார்.
- கொலையாளிகளான சகோதரர்கள் 4 பேரையும் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு கருப்பந்துறை வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் சந்தியாகு(வயது 25). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலையில் கருப்பந்துறையில் உள்ள நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தின் புறக்காவல் நிலையம் முன்பு வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சந்தியாகுவை சரமாரி வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இதனை அந்த பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் பார்த்து ஓடி வந்தனர். உடனடியாக சந்திப்பு போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனால் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
சம்பவஇடத்திற்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணக்குமார், உதவி கமிஷனர் ராஜேஷ்வரன் ஆகியோரும் விரைந்து வந்து சந்தியாகு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் முன்விரோதத்தில் இந்த கொலை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தியாகு குடும்பத்தினருக்கும், அவரது வீட்டின் அருகே பக்கத்து வீட்டில் வசிக்கும் சுடலைமணி என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் சுடலைமணியின் 4 மகன்களும் சேர்ந்து சந்தியாகுவின் தந்தை ராஜூவை தாக்கியுள்ளனர். இதனால் சந்தியாகு ஆத்திரம் அடைந்து சுடலைமணியின் மகன் கவுதம் என்பவரை பிளேடால் கழுத்தில் வெட்டினார்.
இதையடுத்து சந்தியாகு கொலைமுயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் சிறையில் இருந்து அவர் வெளியே வந்து தினமும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே கவுதமின் சகோதரர் யோசுவா எப்படியாவது சந்தியாகுவை கொலை செய்ய வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டி வந்துள்ளார்.
இதற்காக அவருடன் நெருங்கி பழக திட்டமிட்ட அவர், அடிக்கடி சந்தியாகுவை மது குடிக்க அழைத்து சென்று வந்துள்ளார். நேற்றும் வழக்கம்போல் 2 பேரும் மது குடித்துள்ளனர். அப்போது சந்தியாகுவுக்கு கூடுதலாக மதுவை ஊற்றி கொடுத்து அவருக்கு போதையை ஏற்றிவிட்டுள்ளனர். தொடர்ந்து சந்தியாகு வீட்டுக்கு செல்லும் வழியில் புறக்காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது யோசுவா தனது சகோதரர்கள் கவுதம், கார்த்தி உள்பட 3 பேருடன் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்து சந்தியாகுவை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளான சகோதரர்கள் 4 பேரையும் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இந்த கொலையில் சுடலைமணிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தியாகு உறவினர்கள் தெரிவித்ததால் அவரை சந்திப்பு போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்யும் வரை சந்தியாகு உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் கருப்பந்துரையில் இன்று 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.






