search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் வழியில் மக்கள் பணியாற்றுவேன்: திருக்குவளையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
    X

    திருக்குவளை கலைஞர் இல்ல நினைவகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பெழுதிய காட்சி.

    முதல்-அமைச்சர் வழியில் மக்கள் பணியாற்றுவேன்: திருக்குவளையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

    • கடந்த மூன்று நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன்.
    • தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்த திட்டங்கள் மக்களிடம் சென்றுள்ளது குறித்தும், நிறைவேற்றப்படுகின்ற பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

    திருவாரூர்:

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி, அரியலூர், தஞ்சாவூர் மாவட்ட சுற்றுபயணத்தை முடித்து விட்டு நேற்று மாலை திருவாரூர் மாவட்டத்துக்கு வந்தார். மன்னார்குடி அடுத்த வடுவூரில் ரூ.7 கோடியில் கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கை திறந்து வைத்தார்.

    பின்னர் வடுவூரில் இருந்து புறப்பட்டு திருவாரூரை அடுத்த காட்டூரில் உள்ள கலைஞர் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். இரவு திருவாரூர் சுற்றுலா ஆய்வு மாளிகையில் தங்கினார்.

    இன்று காலை மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் கருணாநிதி, அவரது பெற்றோர் முத்துவேல்-அஞ்சுகம், முரசொலி மாறன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    கலைஞர் இல்ல நினைவகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பு எழுதினார்.

    தொடர்ந்து அவருக்கு, தி.மு.க. தொண்டர்கள் கிரிக்கெட் பேட், பந்து உள்ளிட்ட உபகரணங்களை பரிசாக வழங்கினர்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    விடியலை நோக்கி பிரசாரத்தில் கடந்த ஆட்சியில் இதே கலைஞர் இல்லம் முன்பு கைதானேன். தற்போது அமைச்சராக வந்துள்ள தருணம் மகிழ்ச்சி அளிக்கிறது. மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் மக்கள் பணியாற்றுவேன். செல்லும் வழியெல்லாம் நல்ல வரவேற்பு உள்ளது. முதல்-அமைச்சர் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்கிறார்கள். அவைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, அரசு திட்டங்களின் செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு ரூ.5 கோடியில் 316 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த மூன்று நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன். தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்த திட்டங்கள் மக்களிடம் சென்றுள்ளது குறித்தும், நிறைவேற்றப்படுகின்ற பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். திருக்குவளையில் இருந்து திருவாரூர் வரும் வழியில் ஏராளமான பொதுமக்கள் வரவேற்பு அளித்ததால் இங்கு வர தாமதம் ஏற்பட்டது.

    எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல். குடும்பத்திற்கு ஒருவருக்காவது அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதை இலக்காக வைத்து முதல்-அமைச்சர் பணியாற்றுகிறார். அவரோடு, அவர் காட்டுகின்ற வழியில் நாங்களும் பணியாற்றி வருகிறோம்.

    மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்த அரசுக்கு அனைவரும் துணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, எம்.எல்.ஏ.க்கள் கலைவாணன், ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×