search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெஸ்ட் பர்சேஸ் என்ற பெயரில் வணிகர்களிடம் அரசு கெடுபிடி செய்வதில்லை- அமைச்சர் மூர்த்தி
    X

    'டெஸ்ட் பர்சேஸ்' என்ற பெயரில் வணிகர்களிடம் அரசு கெடுபிடி செய்வதில்லை- அமைச்சர் மூர்த்தி

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
    • மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    நாகர்கோவில்:

    வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று குமரி மாவட்டம் வந்தார்.

    அதன்பிறகு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பேசினார். பத்திரபதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, கலெக்டர் அரவிந்த், பதிவுத்துறை தலைவர் சிவனருள், மாவட்ட பதிவாளர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், சப்-கலெக்டர் குணால் யாதவ், கோட்டாட்சியர் சேது ராமலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பத்திரப்பதிவு துறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையை பொருத்தவரை 39 புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதால் பத்திரப்பதிவுத்துறை வளர்ச்சி அடைந்துள்ளது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வணிக வரித்துறையில் ரூ.21 ஆயிரத்து 500 கோடியும், பதிவு துறையில் ரூ.3 ஆயிரம் கோடியும் வருவாய் உயர்ந்து உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பத்திரப்பதிவில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. 3 அடி முதல் 4 அடியில் மட்டுமே பாதைகள் இருப்பதால் அந்த பகுதியில் உள்ள நிலங்களை பதிவு செய்வதில் சிக்கல்கள் உள்ளது. இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு உள்ளோம்.

    மேலும் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளோம். அந்த இடத்தின் அமைப்பு எந்த மாதிரியாக உள்ளது? என்பதை ஆய்வு செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

    'டெஸ்ட் பர்சேஸ்' என்ற பெயரில் வணிகர்களிடம் தமிழக அரசு எந்தவித கெடுபிடியும் காட்டவில்லை. வணிகர்களுக்கு பாதுகாவலனாக இந்த அரசு விளங்கி வருகிறது. நியாயமாக, நேர்மையாக வியாபாரம் செய்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

    மக்களிடம் வாங்கக்கூடிய வரி அரசுக்கு முறையாக செலுத்தப்பட வேண்டும் என்பது தான் இந்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையாகும். இதில் வணிகர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 'டெஸ்ட் பர்சேஸ்' குறித்து வியாபாரிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை வணிக வரித்துறை மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×