என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
    X

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு ஆரத்தி எடுத்தும், தேங்காய் சுற்றியும் வாக்கு சேகரித்தார்.

    முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

    • அ.தி.மு.க. ஆட்சியில் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வந்தனர்.
    • குறிப்பாக ஆதரவற்ற முதியோர்களாக இருந்தாலும் ஆண் வாரிசு இருக்கக் கூடாது என்ற ஒரு விதியை கொண்டு வந்திருக்கிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் வீடு, வீடாக சென்று திண்ணை பிரசாரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈடுபட்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றோம். இந்த ஆட்சி குறித்தான மதிப்பீடுகளில் மக்கள் மிகவும் திருப்திகரமாக இருக்கிறார்கள்.

    இந்த ஆட்சியின் திட்டங்களும் முதல்-அமைச்சரின் பணிகளும் வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏறத்தாழ ரூ.400 கோடி மதிப்பில் ஈரோடு மாநகராட்சியில் கடந்த ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    ஈரோடு மாநகராட்சியில் எந்த பகுதிக்கு சென்றாலும் மழை நீர் வடிகால் பணி, பாதாள சாக்கடை விரிவாக்க பணி என ஏராளமான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதனால் சாலைகள் கூட சில இடங்களில் சேதம் அடைந்திருக்கின்றன.

    பாதாள சாக்கடையும், புதிய மழைநீர் வடிகால் பணியும் முடிவுற்றால் மீண்டும் அந்த சாலைகள் புதுப்பித்து தரப்படும். அந்த பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அந்த பணிகளும் செய்யப்படும்.

    ஈரோடு மாநகராட்சி ஒரு மிகச்சிறந்த மாநகராட்சியாக வருவதற்கு அனைத்து கட்டமைப்புகளையும் மேம்படுத்த முதல்-அமைச்சர் ரூ.400 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொண்டு இருக்கின்றார்.

    அ.தி.மு.க. ஆட்சியில் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வந்தனர். குறிப்பாக ஆதரவற்ற முதியோர்களாக இருந்தாலும் ஆண் வாரிசு இருக்கக் கூடாது என்ற ஒரு விதியை கொண்டு வந்திருக்கிறார்கள்.

    அதனால் 7.50 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு உதவி தொகை நிறுத்தப்பட்டது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு உரியவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும், ஆண் வாரிசு இருந்தாலும் ஆதரவற்றவர்களாக இருந்தாலும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்தவர்களுக்கும், நிறுத்தப்பட்டவர்களுக்கு அனைத்து வருவாய் அலுவலகங்களிலும் கணக்கெடுக்கப்பட்டு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அமைச்சர் சுப்பிரமணியனை வரவேற்க பெண்கள் ஆரத்தி மற்றும் திருஷ் தேங்காயுடன் வீடுகளில் நின்று இருந்தனர். அப்போது அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களிடம் இருந்து ஆரத்தியை வாங்கி வாக்காளர்களுக்கே ஆரத்தி எடுத்தார். மேலும் அவர்களது தலையை தேங்காயால் சுற்றி உடைத்தார்.

    Next Story
    ×