என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுரை அருகே ஒத்தக்கடையில் பேராசிரியர் வீட்டில் ரூ.25 லட்சம் நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளை
- பாலசுப்ரமணியம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒத்தக்கடை புறநகர் பகுதியில் உள்ள வரைவாளன் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்.
இவர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு விவசாய கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சோனியா மதுரை பாண்டிகோவிலில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் மென் பொறியாளராக உள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டனர்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த 45 பவுன் நகை, ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடிக் கொண்டு தப்பினர்.
இதனிடையே பாலசுப்ரமணியம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பாலசுப்பிரமணியன் வெளியூரில் இருந்து வீட்டுக்கு வந்து பார்த்த போது நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சோனியா ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் சுகுமாறன், சப்-இன்ஸ்பெக்டர் சேது, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ. 25 லட்சம் ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதனிடையே பேராசிரியர் வீட்டின் அருகே உள்ள குமரன் நகரில் புகுந்த கொள்ளை கும்பல் 4 பவுன் நகையை திருடி சென்றுள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






