search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டம் முழுவதும் சூறைக்காற்றுடன் மழை- மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் சேதம்
    X

    குமரி மாவட்டம் முழுவதும் சூறைக்காற்றுடன் மழை- மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் சேதம்

    • திற்பரப்பு அருவிப்பகுதியில் விட்டு விட்டு பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • பேச்சிபாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

    நாகர்கோவில்:

    கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து அங்கு கனமழை கொட்டி வருகிறது.

    இதன் தாக்கமாக குமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்ய தொடங்கி உள்ளது. கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டத்தில் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசி வருகிறது.

    நாகர்கோவிலில் இன்று காலையில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. திடீரென மழை பெய்தது. இதனால் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர். அதன் பிறகு விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. சுசீந்திரம், அருமனை, அஞ்சு கிராமம், தடிக்காரன் கோணம், கீரிப்பாறை, கன்னிமார், இரணியல், குளச்சல், தக்கலை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    திற்பரப்பு அருவிப்பகுதியில் விட்டு விட்டு பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பேச்சிபாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    அணைகளின் நீர்மட்டமும் உயரத் தொடங்கி உள்ளது. மலையோரப் பகுதியான பாலமோர் பகுதியில் கன மழை கொட்டி தீர்த்தது. சிற்றார் 2-ல் அதிகபட்சமாக 32.2 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகியுள்ளது.

    சூறைக்காற்றுடன் பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மரக் கிளைகள் முறிந்து விழுந்தன. அவை மின்கம்பங்கள் மீது விழுந்ததில் மின்கம்பங்களும் சேதம் அடைந்தன. மின்சார வாரிய ஊழியர்கள் அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இருளப்பபுரம் பீச் ரோடு சாலையில் மரம் முறிந்து விழுந்தது. போலீசார் அதை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். இதே போல் கிருஷ்ணன் கோவில் பகுதியிலும், நாகராஜா கோவில் பகுதியிலும் தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. தீயணைப்புத் துறையினரும் பொதுமக்களும் அதை வெட்டி அப்புறப்படுத்தினர். தடிக்காரன்கோணம், கீரிப்பாறை பகுதிகளிலும் மரம் முறிந்து விழுந்தது. மாவட்டம் முழுவதும் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிபாறை 23.4, பெருஞ்சாணி 26.2, சிற்றார் 1-28, சிற்றார் 2-36.4, பூதப்பாண்டி 17.2 களியல் 8 கன்னிமார் 10.4 கொட்டாரம் 3.2 குழித்துறை 7.4, மயிலாடி 4.4, நாகர்கோவில் 20.2, புத்தன்அணை 24.8, சுருளோடு 27, தக்கலை 29.3, குளச்சல் 10.6, இரணியல் 14, பாலமோர் 31.4, மாம்பழத் துறையாறு 32.2, திற்பரப்பு 22.3 ஆரல்வாய்மொழி 6, அடையாமடை 12.

    Next Story
    ×