search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு தி.மு.க. அரசு தான் பொறுப்பு- கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
    X

    கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு தி.மு.க. அரசு தான் பொறுப்பு- கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

    • ஜாதி மோதல்கள் ஏற்படாமல் கட்டுப்படுத்துவது தான் காவல்துறையின் பணி.
    • போலீசார் திட்டமிட்டே எங்கள் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை.

    நெல்லை:

    புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்காக போராட்டத்தை முன்னெடுத்தது எங்கள் கட்சி தான். எங்கள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 23-ந்தேதி காலையில் ஆற்றில் அஞ்சலி செலுத்திவிட்டு மாலையில் பொதுக்கூட்டம் நடத்தப்படும்.

    ஆனால் இந்த ஆண்டு நெல்லையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டனர். அதற்கான காரணம் குறித்து போலீசாரிடம் கேட்ட போது, அனுமதி கேட்ட இடம் ஜாதி ரீதியாக பதற்றம் நிறைந்த பகுதி எனக்கூறி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க முடியாது என கூறிவிட்டனர்.

    ஜாதி மோதல்கள் ஏற்படாமல் கட்டுப்படுத்துவது தான் காவல்துறையின் பணி. ஆனால் போலீசார் திட்டமிட்டே எங்கள் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை.

    இதற்கு போலீசார் பதில் சொல்லியே தீர வேண்டும். இந்த பிரச்சினையை நாங்கள் சட்ட ரீதியில் சந்திப்போம்.

    திராவிடம், திராவிடம் என்று பேசியே மக்களை ஜாதி ரீதியாக, மதம் ரீதியாக பிரித்து விட்டார்கள். 50 வருடமாக மாறி, மாறி ஆட்சி செய்த கட்சிகள் மத மோதல்களை தடுக்கவில்லை.

    கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சட்டம்-ஒழுங்கு மீது நம்பிக்கையை இழந்த பிறகு தான் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே இதற்கு தி.மு.க. அரசு தான் பொறுப்பு.

    தி.மு.க. 500 வாக்குறுதிகளை அளித்தது. அதில் 5 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களுக்கு பிறகும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது. இது பாராளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×