search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் விடிய விடிய கொட்டிய கனமழை
    X

    சேலம் மாவட்டத்தில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் விடிய விடிய கொட்டிய கனமழை

    • எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் அந்த பகுதிகளில் உள்ள ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
    • இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இன்று காலையிலும் ஓடைகள் மற்றும் ஏரிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    குறிப்பாக காடையாம்பட்டி, எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி, ஏற்காடு, தம்மம்பட்டி, சேலம் மாநகர் உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு 9 மணியளவில் தொடங்கிய மழை விடிய விடிய கனமழையாக கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்வெளிகளில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    காடையாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று காலை வரை கனமழையாக கொட்டியதால் மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தீவட்டிப்பட்டி அருகே வீட்டின் மதில் சுவர் இடிந்து விழுந்து 60 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.

    இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். மேலும் அங்குள்ள ஓடைகள் மற்றும் ஆறுகளில் தண்ணீர் பெருக்கடுத்து ஓடுகிறது. வயல்வெளிகள் உள்பட தாழ்வான பகுதிகளில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் அந்த பகுதிகளில் உள்ள ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இன்று காலையிலும் ஓடைகள் மற்றும் ஏரிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    ஏற்காட்டில் நேற்றிரவு தொடங்கிய மழை பலத்தகாற்றுடன் இன்று அதிகாலை வரை கன மழையாக கொட்டியது . இந்த மழை மற்றும் காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதையடுத்து ஏற்காட்டில் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. இந்த மின் தடையால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    சேலம் மாநகரில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை விடிய, விடிய கன மழையாக கொட்டியது. அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, சூரமங்கலம் உள்பட பல பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கிச்சிப்பாளையம், பெரமனூர், அம்மாப்பேட்டை உள்பட பல இடங்களில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர். மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    அதிகபட்சமாக காடையாம்பட்டியில் 167 மி.மீ. மழை பெய்துள்ளது. எடப்பாடி 146, ஓமலூர் 122, சங்ககிரி 94, ஏற்காடு 78.2, தம்மம்பட்டி 75, ஆனைமடுவு 67,கரியகோவில் 62, சேலம் 61.5, பெத்தநாயக்கன்பாளையம் 42, ஆத்தூர் 37.4, கெங்கவல்லி 30, வீரகனூர் 26, மேட்டூர் 19 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 1027.01 மி.மீ.மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.

    Next Story
    ×