என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொடைக்கானலுக்கு சுற்றுலா அழைத்து சென்று பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை
  X

  கைதான ஆசிரியர் ரமேஷ்

  கொடைக்கானலுக்கு சுற்றுலா அழைத்து சென்று பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விசாரணை முடிவில் ஆசிரியர் ரமேஷ் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
  • பாலியல் புகாரில் கைதான ஆசிரியர் ரமேசை சஸ்பெண்டு செய்து கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

  புதுக்கோட்டை:

  புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அன்னவாசல், இலுப்பூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமப்பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.

  இந்த பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் ரமேஷ் (வயது 45). வேதியியல் ஆசிரியராகவும் இருந்து மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் எடுத்து வருகிறார். சபல புத்தி கொண்ட இவர் மாணவிகளிடம் அதிக நெருக்கம் காட்டி வந்துள்ளார். ஆசிரியர் மட்டுமின்றி உதவி தலைமை ஆசிரியர் என்ற அந்தஸ்தில் இருந்ததால் மாணவிகள் அச்சத்தில் அவரது நடவடிக்கைகளை சகித்துக் கொண்டு வந்துள்ளனர்.

  இந்த நிலையில் ஆசிரியர் ரமேஷ் கடந்த மாதம் 7-ந்தேதி அதே பள்ளியில் பயிலும் மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்கள் என 5 பேரை சுற்றுலா அழைத்து செல்ல முடிவெடுத்தார்.

  மாணவிகளை மட்டும் அழைத்து சென்றால் சந்தேகம் ஏற்படும் என்று கருதி, 2 மாணவர்களையும் அழைத்துக்கொண்டு, பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோருக்கு தெரியாமல் கொடைக்கானலுக்கு தனது காரில் சுற்றுலாவுக்கு அழைத்து சென்றுள்ளார்.

  பின்னர் அங்கு இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்த ஆசிரியர் ரமேஷ், அதில் ஒரு அறையில் தானும், மற்றொரு அறையில் மாணவ, மாணவிகளையும் தங்க வைத்துள்ளார். பின்னர் தன்னுடைய அறைக்கு மாணவி ஒருவரை அழைத்து அவருக்கு பாலியல் தொல்லைகள் அளித்துள்ளார். உனக்கு வேண்டியவற்றை வாங்கி தருவதாகவும், மதிப்பெண்களை உயர்த்தி வழங்குவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.

  இதையடுத்து கொடைக்கானலில் இருந்து ஊர் திரும்பும் வழியில் அங்கு நடந்த சம்பவங்கள் குறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று தெரிவித்ததோடு, கொடைக்கானலில் எடுத்த செல்போன் படங்களை அழித்து விட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

  இருந்தபோதிலும் அச்சம் தவிர்த்த மாணவி ஒருவர் சுற்றுலா சென்ற இடத்தில் ஆசிரியர் ரமேஷ் தன்னிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ந்துபோன அவர்கள் முதலில் பள்ளி நிர்வாகத்திடம் வந்து புகார் கூறி முறையிட்டுள்ளனர்.

  அப்போதுதான் பள்ளி நிர்வாகத்தினருக்கே மாணவ, மாணவிகளை அழைத்துக்கொண்டு ஆசிரியர் கொடைக்கானல் சுற்றுலா சென்ற தகவல் தெரிந்துள்ளது. இதுபற்றி ஆசிரியர் ரமேஷிடம் பள்ளி நிர்வாகத்தினர் கேட்டபோது, தான் எந்த விதத்திலும் ஒழுங்கீனமாக நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.

  அதன் பிறகு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகளிடம் சுற்றுலா போனதை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டிய தகவலும் வெளியானது. அத்துடன் பள்ளி வளாகத்தில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு மாணவிகள் சிலரை அழைத்து ஆசிரியர் ரமேஷ் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல்கள் அளிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக தெரிகிறது.

  இதனை வெளியில் யாரிடமாவது கூறினால் செய்முறை தேர்வில் மதிப்பெண்களை குறைத்து பெயில் ஆக்கி விடுவதாகவும், ஆபாசமான வார்த்தைகளை கூறி, வாய பொத்திக்கிட்டு இருக்க வேண்டும் என்றும் மாணவிகளை மிரட்டியுள்ளார். பொதுத்தேர்வுக்கு பயந்து மாணவிகளும் ஆசிரியருக்கு கட்டுப்பட்டு வந்துள்ளனர்.

  பிரச்சினை பூதாகரமானதால் மாணவிகளின் பெற்றோர்கள் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். மேலும் ஆசிரியர் ரமேசுக்கு எதிராக மாணவர் அமைப்புகளும் போராட்டங்களுக்கு தயாராகி வந்தனர். ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் தங்களது பிள்ளைகளை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பவும் தயக்கம் காட்டி வந்தனர்.

  இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக கல்வித்துறை, வருவாய்துறை, காவல் துறை மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர் ரமேஷ் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை செய்தனர்.

  விசாரணை முடிவில் ஆசிரியர் ரமேஷ் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆசிரியர் ரமேஷ் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

  மேலும் நேற்று இரவு உதவி தலைமை ஆசிரியரும், ஆசிரியருமான ரமேஷை போலீசார் கைது செய்தனர். இன்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே பாலியல் புகாரில் கைதான ஆசிரியர் ரமேசை சஸ்பெண்டு செய்து கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

  மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவமும் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோருக்கு தெரியாமல் ஐந்து மாணவ மாணவிகளை சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று அதன் பின்பு அது குறித்து வெளியே சொல்லக்கூடாது என மிரட்டிய சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  சமீப காலமாக மாணவிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை சற்றும் தயக்கமின்றி வெளிக்காட்டி வரும் ஆசிரியர்களின் முயற்சிகளுக்கு கடிவாளம் போடும் வகையில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே ஒட்டுமொத்த பெற்றோர் களின் கோரிக்கையாக உள்ளது.

  Next Story
  ×