search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரிசி கொம்பன் யானையை பிடிக்க கேரளக்குழு உதவியை நாடும் வனத்துறையினர்
    X

    அரிசி கொம்பன் யானையை பிடிக்க கேரளக்குழு உதவியை நாடும் வனத்துறையினர்

    • சுருளி அருவி பகுதிக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை தொடர்வதால் தோட்ட வேலைக்கு செல்பவர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.
    • சண்முகா நதி அணை பகுதியில் முகாமிட்டுள்ள யானை மேகமலை நோக்கி செல்கிறது.

    உத்தமபாளையம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுற்றித்திரிந்த அரிசிக்கொம்பன் யானை கடந்த மாதம் அந்த மாநில வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு தமிழகத்தை ஒட்டிய வனப்பகுதியில் விடப்பட்டது. அதன்பிறகு ஹை வேவிஸ் மலைகிராமங்களில் சுற்றித்திரிந்த அந்த யானை கடந்த மாதம் 27-ந்தேதி கம்பம் நகருக்குள் நுழைந்து சாலையோரம் இருந்த வாகனங்களை சேதப்படுத்தியது.

    அதனை பிடிக்க தமிழக வனத்துறையினர் கண்காணிப்பு சோதனைச்சாவடி அமைத்து மயக்கஊசி செலுத்த முயன்று வருகின்றனர். ராயப்பன்பட்டி அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் சண்முகாநதி அணைப்பகுதியில் கடந்த சில நாட்களாக அந்த யானை உலாவி வருகிறது.

    இதனால் காமய கவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி, கே.கே.பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியை ஒட்டியுள்ள தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் அரிசிக்கொம்பன் யானை அங்குள்ள வாழைத்தோட்டங்களை சேதப்படுத்தி உண்டு வருகிறது. தினந்தோறும் சாரல் மழை பெய்து வருவதால் அது வசிப்பதற்கு ஏற்ற இடமாக மாறியுள்ளது. இரவு நேரங்களில் அணைப்பகுதியில் உள்ள தண்ணீரை குடித்துவிட்டு மீண்டும் சென்று விடுகிறது.

    சுருளி அருவி பகுதிக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை தொடர்வதால் தோட்ட வேலைக்கு செல்பவர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். மேலும் தோட்டப்பயிர்களையும் சேதப்படுத்தி வருவதால் அதன் உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    அரிசி கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க 4 டாக்டர்கள் 2 குழுவாக பிரிந்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். ராயப்பன்பட்டி அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள சண்முகநாதன் கோவில் பகுதிக்கு அரிசி கொம்பன் யானை சென்றது. அங்கு சில நாட்களுக்கு முன்பு சமையலறை சுவற்றை சேதப்படுத்தியது. இந்த நிலையில் நேற்று கோவில் கேட்டையும் சேதப்படுத்தி அங்கிருந்த அரிசியை சாப்பிட்டு சென்றது.

    இதனால் கோவில் வளாகத்தில் தங்கி இருந்த சரஸ்வதியம்மாளை வனத்துறையினர் ஏற்கனவே அங்கிருந்து வெளியேற்றினர். தற்போது அவரது மகன் அங்கு பூஜை செய்து வருகிறார். சில நாட்களுக்கு கோவிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    மூணாறு சின்னக்கானல் பகுதியில் அரிசி கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த குழுவில் இருந்த கேரள டாக்டர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி அரிசி கொம்பன் யானையை பிடிக்க முடிவு செய்துள்ளனர்.

    சண்முகா நதி அணை பகுதியில் முகாமிட்டுள்ள யானை மேகமலை நோக்கி செல்கிறது. இதனை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    சுருளிப்பட்டி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கம்பம் பிளாண்டேசன் ரேஞ்சர் கலையரசன் வெளியாட்களை அப்பகுதிக்குள் அழைத்துச் சென்றுள்ளார். இது குறித்து புகார்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மண்டல வன அலுவலர் பத்மாவதி, ரேஞ்சர் கலையரசனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    மேலும் அனைத்து வனத்துறையினரையும் கண்காணித்து வருகின்றனர். இதனால் செய்தியாளர்களுக்கு முறையான தகவல்கள் கிடைப்பதில்லை. அரிசி கொம்பன் யானை ஒரே இடத்தில் சுற்றித் திரிவதற்கு வாய்ப்பு இல்லை. மேலும் துதிக்கையில் அடிபட்டு யானை சோர்ந்து காணப்பட்டது. குடியிருப்பு பகுதியில் இருந்து 2 கி.மீ தொலைவில் முகாமிட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். இதனால் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    தடை உத்தரவு எப்போது நீங்கும்? இயல்பு நிலை திரும்புமா? என அவர்கள் விரக்தியில் உள்ளனர். எனவே வனத்துறையினர் அரிசி கொம்பன் யானை குறித்து தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×