என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீசாரை கண்டித்து திருப்பூரில் விவசாயிகள் போராட்டம்
- அவிநாசிபாளையத்தில் இருந்து தென்னம்பாளையம் உழவர் சந்தைக்கு விவசாயி ஒருவரின் மகன் காய்கறிகளை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றார்.
- பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் தாராபுரம் ரோடு சந்திராபுரம் பிரிவு அருகே நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை அவிநாசிபாளையத்தில் இருந்து தென்னம்பாளையம் உழவர் சந்தைக்கு விவசாயி ஒருவரின் மகன் காய்கறிகளை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றார்.
அப்போது பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தனர். இதனால் விவசாயிக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விவசாயியை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உழவர் சந்தை விவசாயிகள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் ஒன்று திரண்டு திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதுடன் அங்கு பணியில் இருந்த போலீசாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.






