search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் ஓடும் 12 ஆயிரம் ஷேர் ஆட்டோக்களை அங்கீகரிக்க முடிவு
    X

    சென்னையில் ஓடும் 12 ஆயிரம் ஷேர் ஆட்டோக்களை அங்கீகரிக்க முடிவு

    • பஸ்களில் உள்ள கூட்ட நெரிசலை தவிர்க்கவும் விரைவாக செல்லக்கூடிய பகுதிகளுக்கு செல்லவும் பஸ்களுக்கு பதிலாக ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்வதை மக்கள் விரும்புகின்றனர்.
    • ஷேர் ஆட்டோக்கள் தினமும் மொத்தம் 16.20 லட்சம் கிலோமீட்டர் தூரத்தை கடக்கின்றன என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் அதனையொட்டிய புறநகர் பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மின்சார ரெயில்களும், மாநகர பஸ்களும் திகழ்கின்றன. அடுத்ததாக ஷேர் ஆட்டோக்கள் பொதுமக்கள் பயன்பாட்டில் அதிக முக்கியத்துவத்தை பிடித்துள்ளது.

    ஆனால் ஷேர் ஆட்டோக்களை பொது போக்குவரத்து வாகனமாக அரசு இதுவரையில் ஏற்கவில்லை. ஆனாலும் மக்களின் பயன்பாட்டில் மாநகர பஸ்களுக்கு அடுத்த இடத்தில் இவை உள்ளன.

    பொதுமக்கள் அதிக அளவில் ஷேர் ஆட்டோக்களை இன்றைய காலகட்டத்தில் பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஷேர் ஆட்டோக்களை ஒழுங்கு படுத்தவும், அங்கீகரிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. அதனை பொது போக்குவரத்திற்கு மாற்றுவதற்கான திட்டத்தை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையமும் முடிவு செய்துள்ளது.

    சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ் உலக வங்கியின் உதவியுடன் இடைநிலை போக்குவரத்து திட்டம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஷேர் ஆட்டோக்களின் இயக்கம், கடைசி மைல் இணைப்பு மற்றும் மாநகர பஸ்கள் சேவை இல்லாத பகுதிகளுக்கு இணைப்பை வழங்கும் வகையில் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

    சென்னையில் ஷேர் ஆட்டோக்கள் மாநகர பஸ்களுக்கு போட்டியாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. பஸ்கள் செல்லக்கூடிய வழித்தடங்களில் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுவதால் அதனுடைய வருமானம் குறைகிறது.

    பஸ்களில் உள்ள கூட்ட நெரிசலை தவிர்க்கவும் விரைவாக செல்லக்கூடிய பகுதிகளுக்கு செல்லவும் பஸ்களுக்கு பதிலாக ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்வதை மக்கள் விரும்புகின்றனர்.

    இத்திட்டத்தின் கீழ் பஸ்களை இயக்க முடியாத பகுதிகளுக்கு ஷேர் ஆட்டோக்களை மாற்றவும் கட்டணத்தை நிர்ணயித்து பொது போக்குவரத்தாக ஒழுங்குபடுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

    2013-ம் ஆண்டு பொது கொள்கை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ஷேர் ஆட்டோக்களை தினமும் பயன்படுத்துகின்றனர். 12 ஆயிரம் ஷேர் ஆட்டோக்களில் தினமும் 2.50 லட்சத்திற்கும் அதிகமான பேர் பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கின்றது.

    ஷேர் ஆட்டோக்கள் தினமும் மொத்தம் 16.20 லட்சம் கிலோமீட்டர் தூரத்தை கடக்கின்றன என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷேர் ஆட்டோக்களை 65 சதவீதம் பேர் தினமும் பயன்படுத்துகின்றனர். 87 சதவீதம் பேர் இறுதி இலக்கை அடைய பயன்படுவதாக தெரிய வருகிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனமும் ஏற்கனவே ஷேர் ஆட்டோக்களை இயக்கி வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அதனை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×