search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்: அரசுக்கு எதிராக போர் தொடுப்பதே  சதி திட்டத்தின் நோக்கம்- என்ஐஏ தகவல்
    X

    கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்: அரசுக்கு எதிராக போர் தொடுப்பதே சதி திட்டத்தின் நோக்கம்- என்ஐஏ தகவல்

    • 5 பேர் மீது நேற்று சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. சார்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
    • பழிவாங்கும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

    கோவை:

    கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஐ.எஸ்.அமைப்பின் ஆதரவாளரான ஜமேஷா முபீன்(வயது 28) என்பவர் பலியானார்.

    விசாரணையில் கோவையில் பல்வேறு இடங்களில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டியதும், இதற்கு ஜமேஷா முபீன் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 6 பேர் மீது ஏற்கனவே பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    மீதமுள்ள உமர் பாரூக், பெரோஸ்கான், முகமது தவுபீக், ஷேக் இதாயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 5 பேர் மீது நேற்று சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. சார்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    முகமது அசாருதீன், உமர் பாரூக், ஷேக் இதாயத்துல்லா சனோபர் அலி ஆகியோருடன் இணைந்து ஜமேஷா முபீன் கோவையில் தொடர் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டது வழக்கை விசாரித்த என். ஐ.ஏ. தனிப்படையினருக்கு தெரிய வந்தது.

    தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் வீடியோ மூலம் இது தெரியவந்தது. பழிவாங்கும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

    இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 11 பேர் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அசாருதீன், அப்சர் ஆகியோர் ஜமேஷா முபீன் வெடி பொருட்களை கொள்முதல் செய்யவும், கலக்கவும் உதவி செய்து உள்ளனர். முகமது தல்கா கார் கொடுத்து உதவி செய்தார்.

    பெரோஸ், ரியாஸ், நவாஸ் ஆகியோர் கியாஸ் சிலிண்டரை காரில் ஏற்ற உதவி செய்தனர். இந்த சதி திட்டம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் தீட்டப்பட்டது. இந்த சதி திட்டத்தில் நீலகிரி குன்னூரை சேர்ந்த உமர் பாரூக்கை தலைவனாக தேர்வு செய்துள்ளனர். அவன் தலைவனாக இருந்து மற்றவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை செய்யுமாறு உத்தரவிட்டு உள்ளார்.

    முகமது தவுபீக்கிடம் ஜமேஷா முபீன் குண்டு தயார் செய்வதற்கான வரைபடங்கள், கையால் எழுதப்பட்ட விவரங்கள் கொண்ட நோட்டு புத்தகங்கள், பயங்கரவாத சிந்தனையை தூண்டும் புத்தகங்கள் ஆகியவற்றை கொடுத்து உள்ளார். இதனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர்.

    இந்த சதி திட்டத்தை நிறைவேற்ற உமர் பாரூக்கும், ஜமேஷா முபீனும் நிதி வசூலித்துள்ளனர்.

    சனோபர் அலியும் நிதி உதவி அளித்துள்ளார். பெரோஸ்கான் பொருட்களை கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகளை செய்தார்.

    மேலும் இவர்கள் அரசின் பொதுநிர்வாகம், போலீஸ், நீதித்துறை ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் அரசுக்கு எதிராக போர் தொடுப்பதே இந்த சதி திட்டத்தின் நோக்கம் என கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×