என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கரூர் வருகை
    X

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கரூர் வருகை

    • முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக கரூர் வருகை தரும் அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி, கலெக்டர் பிரபு சங்கர் மற்றும் அதிகாரிகள் வரவேற்கிறார்கள்.
    • அதேபோல் வழிநெடுகிலும் தி.மு.க. நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கரூர்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக சென்று புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், பல்வேறு துறைகள் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

    அந்த வகையில் இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக கரூர் மாவட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் இன்று வருகை தருகிறார். சென்னையில் இருந்து சிறப்பு விமான மூலம் மாலை 5.30 மணிக்கு திருச்சி வருகை தருகிறார். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் கரூர் வருகிறார்.

    முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக கரூர் வருகை தரும் அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி, கலெக்டர் பிரபு சங்கர் மற்றும் அதிகாரிகள் வரவேற்கிறார்கள். அதேபோல் வழிநெடுகிலும் தி.மு.க. நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதையடுத்து கரூர் கலெக்டர் அலுவலகம் அருகாமையில் அமைந்துள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இரவு 8 மணிக்கு கரூர் மாவட்டத்தை சேர்ந்த தொழில் முனைவோர்கள் மற்றும் வர்த்தகர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது பின்னலாடை உள்ளிட்ட பல்வேறு தொழில் வளர்ச்சி குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

    பின்னர் கரூரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார். அதைத் தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு கரூர் திருமாநிலையூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட விழா மேடைக்கு வருகை தருகிறார். வரும் வழியில் லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் அவருக்கு வழிநெடுக வரவேற்பு அளிக்கிறார்கள்.

    தொடர்ந்து நடைபெறும் அரசு விழாவில் 80 ஆயிரத்து 750 பேருக்கு ரூ.500 கோடி மதிப்பிலான பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பேசுகிறார். இதில் புதிய திட்டங்களையும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விழா நிறைவடைந்த பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாமக்கல் மாவட்டம் புறப்பட்டு செல்கிறார். செல்லும் வழியில் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் அரவக்குறிச்சி தொகுதி மக்கள் அளிக்கும் வரவேற்பினை ஏற்றுக்கொள்கிறார்.

    மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் கரூர் மாவட்டத்திற்கு முதன்முறையாக அரசு முறை பயணமாக வருவதால் அவரை வரவேற்க மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சார்பாக வி.செந்தில் பாலாஜி பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளார்.

    இன்று மாலை வருகை தரும் முதல்வருக்கு கரூர் மாவட்ட எல்லையான பெட்டவாய்த்தலை, குளித் தலை, கிருஷ்ணராயபுரம், உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்ட வரவேற்பை அளிக்கிறார்கள்.

    அரசு நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 80 ஆயிரத்து 750 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது அனைத்து தரப்பினராலும் உற்று நோக்கப்படுகிறது. அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து திருமாநிலையூர் விழா மேடைக்கு வரும் வழியில் மட்டும் 30 இடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இந்த விழாவில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். முதல்வர் வருகையால் கரூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மத்திய மண்டல ஐ.ஜி. தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×