என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 மாவட்டங்களில் மழை பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர் நேரில் ஆய்வு: 2500 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்
    X

    2 மாவட்டங்களில் மழை பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர் நேரில் ஆய்வு: 2500 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்

    • நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்களை விவசாயிகள் எடுத்து முதல்-அமைச்சரிடம் கொடுத்து முறையிட்டனர்.
    • நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்களை விவசாயிகள் எடுத்து முதல்-அமைச்சரிடம் கொடுத்து முறையிட்டனர்.

    மயிலாடுதுறை :

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 8-ந்தேதி முதல் கனமழை கொட்டி தீர்த்தது.

    குறிப்பாக சிதம்பரம், விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் கனமழை நீடித்தது. சிதம்பரத்தில் மட்டும் ஒரே நாளில் 30 செ.மீ. மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் 8-ந்தேதி முதல் 28 மணி நேரத்தில் 33.25 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அதன் பின்னர் மறுநாள் ஓரளவு மழை குறைந்தது.

    10-ந்தேதி மீண்டும் அதிகாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. அப்போது விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் கடலூர் மாவட்டத்தில் விளை நிலங்கள் அனைத்தும் வெள்ளக்காடானது. கடலூர் நகர் பகுதியான பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், குண்டுஉப்பலவாடி ஆகிய பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்தது.

    கடலூர் சிப்காட் செல்லும் சாலை முழுவதும் தண்ணீர் உள்ளதால் தற்போதும் அந்த பகுதி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    சிதம்பரம் பகுதியில் மட்டும் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரால் சூழப்பட்டது. குறிப்பாக மாவட்டம் முழுவதும் 23,118 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டது. 242 வீடுகள் மழைக்கு இடிந்தது.

    மேலும் கனமழைக்கு 30 பசுமாடுகளும், 37 ஆடுகள் உள்ளிட்ட 108 கால்நடைகளும் பலியானது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் தண்ணீரால் சூழப்பட்ட நெற்பயிர்களுக்கு 1 ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வீதம் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

    எனவே நிவாரண உதவி வழங்கவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

    இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

    குறிப்பாக சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. அளவுக்கு அதி கனமழை கொட்டியது. 122 ஆண்டு கால வரலாற்றில் பெய்த கனமழையால் சீர்காழி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ஏராளமான வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல தெருக்களில் மழைநீர் 4 அடி உயரத்துக்கு செல்கிறது.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்களை தங்க வைக்க சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 42 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 87 ஆயிரம் ஏக்கரில் சம்பா இளம்பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டு உள்ளன.

    இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய முடிவு செய்தார்.

    இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டார். புதுவையில் உள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்கினார்.

    இன்று (திங்கட்கிழமை) காலை அவர் புதுச்சேரியில் இருந்து கார் மூலம் கடலூர் புறப்பட்டார். கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் வெள்ளத்தால் சேதமான விளை நிலங்களை நேரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அந்த பகுதியில் குடிசை வீடு சேதம் அடைந்ததை கணக்கீட்டு 10 பேருக்கு தலா ரூ.4,100 வீதம் வழங்கினார். மேலும் முழுமையாக குடிசை வீடு இடிந்த 2 பேருக்கு தலா ரூ.5,200 வீதம் நிவாரணம் வழங்கினார். இது தவிர அரிசி, வேஷ்டி, புடவைகளும் வழங்கினார்.

    அதன்பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டிருந்த மாவட்ட அளவிலான வெள்ளப்பாதிப்பு தடுப்பு குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

    இதனைத்தொடர்ந்து சிதம்பரம் அருகே உள்ள வல்லம் படுகை பகுதிக்கு சென்றார். அங்கு தண்ணீரால் சூழப்பட்ட குடியிருப்பு வாசிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    வல்லம் படுகையில் சேதம் அடைந்த 2 குடிசை வீடுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் 3 பேருக்கு வழங்கினார். குடிசை வீடுகளை இழந்த 2 பேருக்கு தலா ரூ.4,100 வழங்கினார்.

    அதனைத்தொடர்ந்து சிதம்பரம் நகராட்சி சார்பில் வெள்ளபாதிப்பு குறித்த புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து அவர் சீர்காழிக்கு கார் மூலம் புறப்பட்டார்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பச்சை பெருமாநல்லூர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் கனமழையால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை சந்தித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறி னார்.

    அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர் அவர்களுக்கு பிஸ்கட், பிரட் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

    அங்கிருந்து புறப்பட்டு அருகே உள்ள உமையாள்பதி கிராமத்துக்கு சென்றார். அங்கு வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் சேத விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்களை விவசாயிகள் எடுத்து முதல்-அமைச்சரிடம் கொடுத்து முறையிட்டனர். நெற்பயிர்களை வாங்கி கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    இதனை தொடர்ந்து சீர்காழி புதிய பஸ் நிலையத்துக்கு சென்று, அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான அரிசி , காய்கறி உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்களை வழங்கினார். மொத்தம் 2500 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.

    Next Story
    ×