search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் தொழிற்சங்க பிரதிநிதிகள் நாளை முக்கிய பேச்சுவார்த்தை: முடிவு ஏற்படாவிட்டால் ஸ்டிரைக்?
    X

    பஸ் தொழிற்சங்க பிரதிநிதிகள் நாளை முக்கிய பேச்சுவார்த்தை: முடிவு ஏற்படாவிட்டால் ஸ்டிரைக்?

    • புதிதாக வாங்கப்படும் மாநகர பஸ்களை அரசு-தனியார் பங்களிப்புடன் ஓட்டுவதற்கு சாத்தியக்கூறுகளை போக்குவரத்து துறை ஆராய்ந்து வந்தது.
    • தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்பட பல்வேறு சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் மொத்தம் 3,233 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் தினமும் 30 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் பயணம் செய்கின்றனர்.

    மாநகர பஸ்களில் சாதாரண ஒயிட் போர்டு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளும் பயண சலுகையை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் ஒவ்வொரு பணிமனையிலும் 'ஸ்பேர் பார்ட்ஸ்' இல்லாத காரணத்தால் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளதாக தொழிற்சங்கத்தினர் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.

    இதற்கிடையே போக்குவரத்து கழகத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக உலக வங்கி நிதி உதவியுடன் இந்த ஆண்டு 500 மின்சார பஸ்களை வாங்க அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டும் 500 பஸ்கள் வாங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

    புதிதாக வாங்கப்படும் மாநகர பஸ்களை அரசு-தனியார் பங்களிப்புடன் ஓட்டுவதற்கு சாத்தியக்கூறுகளை போக்குவரத்து துறை ஆராய்ந்து வந்தது.

    இதற்கு தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்பட பல்வேறு சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து சமீபத்தில் பேசி இருந்தார்.

    அப்போது அவர் போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் சென்னை மாநகர போக்குவரத்தில் தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறி இருந்தார். மேலும் அரசு வழித்தடங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படாது என்றும் ஊழியர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படமாட்டார்கள் என்றும் கூறி இருந்தார்.

    இந்த சூழ்நிலையில் 12 போக்குவரத்து பணிமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் (காண்டிராக்ட்) 400 ஊழியர்கள் நியமிக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகர பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் மத்தியில் நேற்று மாலையில் வேகமாக தகவல் பரவியது.

    இதனால் மாநகர பஸ் டிரைவர்கள் திடீரென்று ஆங்காங்கே பஸ்களை நிறுத்தி பயணிகளை கீழே இறக்கிவிட்டு போராட்டத்தில் குதித்தனர். பஸ்களையும் பணிமனைக்கு கொண்டு சென்றுவிட்டனர். இதனால் பொதுமக்கள் வீடு திரும்ப முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர். நடுரோட்டில் பல மணிநேரம் தவித்தனர்.

    போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு இந்த தகவல் தெரியவந்ததும் அவர் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம். காண்டிராக்ட் ஊழியர்கள் நியமனம் வாபஸ் பெறப்படுவதாகவும் அறிவித்தார்.

    இதை ஏற்று பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினார்கள். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று பஸ் ஊழியர்கள் தொழிற்சங்கத்தினரிடம் வற்புறுத்தி வருகின்றனர்.

    இதனால் பஸ் ஊழியர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை எடுத்து சொல்லவும், போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க கூடாது என்பதை பற்றி வலியுறுத்தி பேசவும் தொ.மு.ச. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி. போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டியை நாளை சந்தித்து பேச உள்ளார். அவருடன் தொ.மு.ச. தொழிற்சங்க நிர்வாகிகளும் சென்று சந்திக்கிறார்கள். அதன்பிறகு தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரையும் சந்தித்து பேச உள்ளனர்.

    இதுகுறித்து சண்முகம் எம்.பி. கூறுகையில் போக்குவரத்து துறையில் 'அவுட் சோர்சிங் இல்லை' என்று வாக்குறுதி தரப்பட்டதால் தொழிலாளர்களின் நேற்றைய போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டு உள்ளது. இருந்தாலும் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நாளை அதிகாரிகளையும், அமைச்சரையும் சந்தித்து பேச உள்ளோம் என்றார்.

    அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் இன்று மாலை போக்குவரத்து துறை செயலாளரை சந்தித்து முறையிட உள்ளதாக தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறியதாவது:-

    போக்குவரத்து துறையில் தனியார் மயம் வருவதை தடுக்க அண்ணா தொழிற்சங்கம் ஜனநாயக ரீதியாக பயணிகளை பாதிக்காத வகையில் போராடி வருகிறது.

    ஆனால் நேற்று ஒப்பந்த பணியாளர்கள் 500 பேர் பணிக்கு வர இருப்பதாக தகவல் அறிந்து தொ.மு.ச. தொழிற்சங்க தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.

    பயணிகள் பற்றி அக்கறை இல்லாமல், முன்னறிவிப்பு இல்லாமல் வழியிலேயே பஸ்களை நிறுத்திய சம்பவம் மக்களுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. நேற்றைய போராட்டத்தில் எங்களது அண்ணா தொழிற் சங்கம் பங்கேற்கவில்லை.

    ஆளும் கட்சியை சேர்ந்த தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்காது. ஆனால் நாங்கள் போராட்டம் நடத்தினால் வீடியோ எடுத்து அதில் உள்ளவர்களை கண்டறிந்து வேறு டெப்போவுக்கு மாற்றி விடுவார்கள்.

    அப்படித்தான் கடந்த முறை போராட்டம் நடத்திய 312 பேரை வெவ்வேறு இடத்துக்கு மாற்றி விட்டனர். எங்கள் தொழிலாளர்களை பழி வாங்கும் நோக்குடன் நடத்துகிறார்கள்.

    இதனால் நாங்கள் இன்று மாலை போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டியை சந்தித்து பேச உள்ளோம். எங்களது கோரிக்கைகளையும் எடுத்து கூறுவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    சி.ஐ.டி.யு. தொழிற்சங்க செயலாளர் சவுந்தரராஜன் கூறியதாவது:-

    போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க கூடாது. காண்டிராக்ட் ஊழியர்களை நியமிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் ஏற்கனவே ஏப்ரலில் ஸ்டிரைக் நோட்டீசு கொடுத்துள்ளோம். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஜூன் 6-ந்தேதிக்கு பிறகு ஸ்டிரைக் நடத்துவோம் என்று கூறிவிட்டோம்.

    இது சம்பந்தமாக ஏற்கனவே ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் முடிவு எட்டப்படவில்லை. மீண்டும் நாளை 2-வது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    தொழிலாளர்கள் நலத்துறை இணை கமிஷனர் முன்னிலையில் போக்குவரத்து கழக நிர்வாகமும் நாங்களும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறோம். மற்ற தொழிற்சங்கத்தினர் வந்தாலும் ஆட்சேபனை இல்லை. தேனாம்பேட்டையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு நாளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரையும் பார்த்து பேசுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எனவே நாளை பேச்சுவார்த்தைக்கு பிறகு 6-ந்தேதி பஸ் ஸ்டிரைக் நடைபெறுமா? இல்லையா? என்பது தெரியவரும்.

    Next Story
    ×