என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருக்கோவிலூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜனதா நகர செயலாளர் கைது
- திருக்கோவிலூர் பைபாஸ் சாலை அய்யனார் கோவில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
- திருக்கோவிலூரில் நடைபெற்ற நகை பறிப்பு முயற்சி, நெடுமுடையான் கிராமத்தில் வீடு புகுந்து திருடிய சம்பவங்களில் ஈடுபட்டதை அறிவழகன் ஒப்புக்கொண்டார்.
திருக்கோவிலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ. நகரில் ஒரு பெண்ணிடம் செயினை பறிக்க முயற்சி நடந்தது. அடுத்த நாள் திருக்கோவிலூர் அடுத்துள்ள நெடுமுடையான் கிராமத்தில் பட்டப்பகலில் 2 வீடுகளில் நகை, பணம் திருடிய சம்பவம் நடைபெற்றது.
கொள்ளையர்களை பிடிக்க திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சதிஷ்குமார், ராஜசேகர், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் திருக்கோவிலூர் பைபாஸ் சாலை அய்யனார் கோவில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது அவர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள முள்ளிகிராம் பட்டை சேர்ந்த அறிவழகன் (40) என்பது தெரியவந்தது.
இவர் நெல்லிக்குப்பம் நகர பா.ஜனதா செயலாளராக இருந்து வருகிறார். திருக்கோவிலூரில் நடைபெற்ற நகை பறிப்பு முயற்சி, நெடுமுடையான் கிராமத்தில் வீடு புகுந்து திருடிய சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3½ பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அறிவழகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






