search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் வங்கியில் ஊழியர்கள் உதவியுடன் மானேஜர் செய்த மெகா மோசடி
    X

    பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் வங்கியில் ஊழியர்கள் உதவியுடன் மானேஜர் செய்த மெகா மோசடி

    • பண சேமிப்பு கிடங்கில் இருந்து பணத்தை எடுத்து போலி ரூபாய் நோட்டு மற்றும் சேதாரமான ரூபாய் நோட்டுகளை மாற்றி வைத்து இருப்பது தெரியவந்தது.
    • இந்த மோசடி குறித்து வங்கியின் மண்டல அதிகாரி காகதால் புகார் அளித்தார்.

    கோவை:

    கோவை காந்திபுரம் டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் பாங்க் ஆப் பரோடா வங்கியும், அதன் பண சேமிப்பு கிடங்கும் உள்ளது.

    வங்கி பண சேமிப்பு கிடங்கில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கிக்கு பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகள் ரூ.70.40 கோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதிகாரிகள் ரூபாய் நோட்டுகளை ஆய்வு செய்த போது பல்வேறு வகைகளில் ரூ.3.28 கோடி மோசடி செய்யப்பட்டது கண்டுபிக்கப்பட்டது. இதனையடுத்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் குழுவினர் கடந்த மாதம் கோவைக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது பண சேமிப்பு கிடங்கு கடந்த ஆண்டு 3 முறை முறைகேடாக திறக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். பண சேமிப்பு கிடங்கில் இருந்து பணத்தை எடுத்து போலி ரூபாய் நோட்டு மற்றும் சேதாரமான ரூபாய் நோட்டுகளை மாற்றி வைத்து இருப்பது தெரியவந்தது.

    இந்த மோசடி குறித்து வங்கியின் மண்டல அதிகாரி காகதால் புகார் அளித்தார். புகாரின் பேரில் வங்கி அலுவலர் செல்வராஜன், மேலாளர் ராஜன், அலுவலர் ஜெயசங்கரன், சார்பு அலுவலர் ஸ்ரீகாந்த், பண பாதுகாப்பு அதிகாரி கனகராஜ் ஆகியோர் மீது சென்னை சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் புகார் அளிக்கப்பட்ட மூத்த வங்கி மேலாளர் விஜயலட்சுமி இறந்து விட்டார்.

    புகாரின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் வங்கியில் பதிவான கண்காணிப்பு காட்சிகளை கொண்டு 5 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விசாரணையின் போது வங்கி கதவுகள் எதற்காக 3 முறை திறக்கப்பட்டது என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. மோசடி செய்யப்பட்ட பணத்தை வேறு வங்கியில் டெபாசிட் செய்து உள்ளார்களா? அல்லது சொத்துக்கள் வாங்கி உள்ளனரா? என அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை பயன்படுத்தி போலி நோட்டுகள் தயாரித்து அதனை சேமிப்பு கிடங்கில் வைத்து விட்டு ஓரளவு நல்ல நிலையில் உள்ள நோட்டுகளை அவர்கள் கைப்பற்றி இந்த மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதன்பேரிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. விசாரணையின் முடிவில் 5 பேரும் கைதாக வாய்ப்பு உள்ளது.

    இந்த விவகாரத்தில் இந்த 5 பேர் மட்டும் தான் காரணமா, அல்லது வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

    Next Story
    ×