என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குட்டி யானையின் கால் அடியில் சிக்கி போராடிய வேட்டை தடுப்பு காவலர்
    X

    யானையின் கால் அடியில் சிக்கி போராடிய வேட்டை தடுப்பு காவலர்.

    குட்டி யானையின் கால் அடியில் சிக்கி போராடிய வேட்டை தடுப்பு காவலர்

    • வெகு நேரமாக குடியிருப்பு பகுதிகளிலேயே சுற்றி திரிந்த யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது.
    • வேட்டை தடுப்பு காவலர் நாகராஜை யானை தாக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

    கோவை:

    கோவை மாவட்டம் பேரூர் அருகே உள்ள தீத்திபாளையம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 6 காட்டு யானைகள் குட்டியுடன் ஊருக்குள் புகுந்தது. வெகு நேரமாக குடியிருப்பு பகுதிகளிலேயே சுற்றி திரிந்த யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது.

    வனத்துறையினர் விரைந்து வந்து யானையை வனத்திற்குள் விரட்ட முயற்சி மேற்கொண்டனர். ஆனால் யானைகள் பாலாஜி நகர் பகுதியில் உள்ள அய்யப்பன் கோவிலில் பயிரிடப்பட்டிருந்த வாழைக்குள் புகுந்தது.

    யானை சுற்றுவதை அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த குட்டி யானை ஒன்று தனது கூட்டத்தை பிரிந்து குடியிருப்புக்குள் சுற்றியது. மற்ற யானைகள் வனத்திற்குள் சென்று விட்டன.

    வழக்கமாக ஊருக்குள் அல்லது தோட்ட பகுதியில் பகல் நேரத்தில் தஞ்சமடையும் யானைகளை மாலை நேரத்தில் விரட்டும் வனத்துறையினர் அன்றைய தினம் பகல் நேரத்திலேயே வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது பயத்தில் திக்கு தெரியாமல் ஓடிய யானை அங்கிருந்த கால்நடைகளை தாக்கியது. பின்னர் அங்கிருந்து ஆவேசமாக ஓடிக் கொண்டிருந்த யானை திடீரென எதிரே தென்பட்ட மதுக்கரை வனச்சரக வேட்டை தடுப்பு காவலர் நாகராஜ் என்பவரை கீழே தள்ளி காலில் மிதித்தது.

    இதில் பலத்த காயமடைந்த நாகராஜ் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் வேட்டை தடுப்பு காவலர் நாகராஜை யானை தாக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

    அந்த காட்சியில், குட்டி யானையை வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது குட்டி யானை வனத்துறையினரை நோக்கி ஓடி வரவே அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வேட்டைதடுப்பு காவலர் தடுமாறி கீழே விழுந்து, குட்டி யானையின் காலில் சிக்கி கொண்டு வெளியில் வர முடியாமல் தவித்தார்.

    10 நிமிடங்களுக்கும் மேலாக யானையிடம் போராடிய அவர், அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×