என் மலர்
உள்ளூர் செய்திகள்

அம்பத்தூர் அருகே கடையில் பிரியாணி வாங்கும் தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை
- கடையில் பிரியாணி வாங்கும் தகராறில் வாலிபர் வெட்டி கொலைசெய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பத்தூர்:
அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் ரெட்டி தெருவை சேர்ந்தவர் பாலசந்திரன் (வயது22). அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று இரவு அவர் மண்ணூர்பேட்டை பஸ் நிலையம் அருகே உள்ள மதுக்கடையில் நண்பர்களுடன் மது குடித்தார். பின்னர் பாலச்சந்திரன் அருகில் இருந்த கடையில் பிரியாணி வாங்க நின்று கொண்டிருந்தார்.
அப்போது அதேகடைக்கு 3 வாலிபர்கள் மது போதையில் வந்தனர். அவர்கள் கடையில் பிரியாணி வாங்க நின்றபோது பாலச்சந்திரனை இடித்ததாக தெரிகிறது. இதனால் பாலச்சந்திரனுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாம் ஏற்பட்டது.
இந்தமோதலில் பாலசந்திரன் தனது கையில் இருந்த ஹெல்மெட்டால் அந்த வாலிபர்களை தாக்கினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் 3 பேரும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலச்சந்திரனை சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்தில பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரியாணி கடையில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மர்ம வாலிபர்களும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
தகவல் அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் விரைந்து வந்து பாலசந்திரனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே பாலச்சந்திரன் பரிதாபமாக இறந்தார்.
கொலையாளிகள் யார்? என்பது குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். ஏற்கனவே திட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த கொலையில் ஈடுபட்டனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையில் பிரியாணி வாங்கும் தகராறில் வாலிபர் வெட்டி கொலைசெய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






