search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியார் கால்வாயில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி கடையடைப்பு-முற்றுகை போராட்டம்
    X

    பெரியார் கால்வாயில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி கடையடைப்பு-முற்றுகை போராட்டம்

    • பாசன கால்வாயின் கடைமடை பகுதியான மேலூர் பகுதியில் ஒரு போக பாசத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகள் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை.
    • தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு விவசாய பணிக்காக நாளை வைகை அணை திறக்கப்படவுள்ளது.

    மேலூர்:

    மதுரை மாவட்ட விவசாயத்திற்கு வைகை அணை தண்ணீர் பிரதானமாக உள்ளது. வருடந்தோறும் அணையில் இருந்து பெரியார் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.

    பெரியார் கால்வாய் மூலம் மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இருபோக விவசாயம் நடைபெற்று வரும் நிலையில் கடைமடை பகுதியான மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு போக விவசாயமே நடைபெற்று வருகிறது.

    பெரியார் கால்வாய் தண்ணீரை நம்பி மேலூர் அருகே வெள்ளலூர் நாடு என அழைக்கப்படும் 65-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளன. வருடம் தோறும் இந்த பகுதிக்கு ஆகஸ்டு 15-ந்தேதி வைகை அணையில் இருந்து பெரியாறு கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

    ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணையில் நீர்மட்டம் வெகுவாக சரிந்தது. இதனால் மதுரை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. பாசன பரப்பளவும் பாதியாக குறைந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணை நீர்மட்டம் 70 அடியை தாண்டி உள்ளது.

    இதையடுத்து தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு விவசாய பணிக்காக நாளை வைகை அணை திறக்கப்படவுள்ளது. வைகை பெரியாறு பாசன கால்வாய் மூலம் 180 நாட்கள் முறை வைத்து மதுரை மாவட்டம் பேரணை முதல் கள்ளந்திரி வரை தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பாசன கால்வாயின் கடைமடை பகுதியான மேலூர் பகுதியில் ஒரு போக பாசத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகள் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை.

    பருவமழை காரணமாக அணையில் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் மேலூர் பகுதியில் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாய சங்கத் தலைவர் முருகன் மற்றும் விவசாயிகள் கலெக்டர் மற்றும் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் அது தொடர்பாக எந்த பதிலும் தெரிவிக்காமல் கள்ளந்திரி வரை மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருப்பது மேலூர் பகுதி விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதை கண்டித்தும் மேலூர் பகுதிக்கும் கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் இன்று வெள்ளலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கோட்டை நத்தம்பட்டி, உறங்கான்பட்டி, அம்பலக்காரன்பட்டி உட்பட 65-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் மேலூரில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    கடையடைப்பு, முற்றுகை போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி மேலூர் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    Next Story
    ×