என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீலகிரி சுற்றுலா தலங்களுக்கு 4 நாட்களில் 40 ஆயிரம் பேர் வருகை
- ஊட்டி-கோவை சாலை, ஊட்டி-மைசூர் மற்றும் கேரள மாநிலம் செல்லும் சாலைகளிலும் போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.
- ஊட்டி நகரில் வியாபாரமும் களைகட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஊட்டி:
ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
பள்ளி தொடர் விடுமுறை, பண்டிகை விடுமுறைகள் 2 நாட்களுக்கு மேல் வந்தால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.
குறிப்பாக அண்டை மாநிலமான கர்நாடகம், கேரள மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கூட்டமே அதிகமாக காணப்படும். இந்த நிலையில் வார விடுமுறையை தொடர்ந்து நேற்றுமுன்தினம் ஒருநாள் மட்டுமே பணி நாளாக இருந்தது.
நேற்று விடுமுறை என்பதால் பலரும் 4 நாட்கள் தொடர் விடுமுறை எடுத்துக்கொண்டு ஊட்டிக்கு கடந்த சனிக்கிழமை முதல் வரத் தொடங்கினர்.
இதனால் கடந்த 4 நாட்களாக முக்கிய சுற்றுலா தலங்களான தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மற்றும் ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சுற்றுலா பயணிகள் வாகனங்களால், ஊட்டி நகரின் முக்கிய சாலைகளான கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை மற்றும் பூங்கா செல்லும் சாலைகளில் வாகன நெரிசல் காணப்பட்டது.
ஊட்டி-கோவை சாலை, ஊட்டி-மைசூர் மற்றும் கேரள மாநிலம் செல்லும் சாலைகளிலும் போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.
மழை இன்றி தற்போது ஊட்டியில் வெயில் அடிக்கும் நிலையில் அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் வலம் வந்தனர்.
2 மாதங்களுக்கு பின்னர் ஊட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். ஊட்டி நகரில் வியாபாரமும் களைகட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த 4 நாட்களில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊட்டிக்கு வந்திருக்க வாய்ப்புள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 12-ந்தேதி சனிக்கிழமை 9 ஆயிரத்து 743 பேரும், 13-ந் தேதியான ஞாயிற்றுக்கிழமை 13 ஆயிரத்து 676 பேரும், 14-ந் தேதி 10 ஆயிரத்து 865 பேரும் வந்திருந்தனர். நேற்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
4 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் நேற்று மதியத்திற்கு பிறகு தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட தொடங்கினர். இதனால் சாலைகளிலும் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.






