search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.26 லட்சத்து 53 ஆயிரத்து 940 பறிமுதல்
    X

    தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.26 லட்சத்து 53 ஆயிரத்து 940 பறிமுதல்

    • முட்டை லாரியை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
    • உரிய ஆவணங்கள் இன்றி கொன்டு சென்ற ரூ.66 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் காவிரி ஆற்று பாலம் அருகே உள்ள போலீஸ் சோதனை சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை குழுவினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கேரளாவில் இருந்து முட்டைகளை இறக்கிவிட்டு நாமக்கல் செல்வதற்காக வந்த முட்டை லாரியை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். இதில் முட்டை லாரியை ஓட்டி வந்த லாரி டிரைவர் நாமக்கல் திருமலைப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா என்பவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி முட்டைகளை விற்றுவிட்டு கொண்டு வந்த ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்து 160-யை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் கேரளாவில் முட்டைகளை விற்று விட்டு நாமக்கல்லுக்கு திரும்பி வந்த லாரியை சோதனை செய்ததில் லாரியை ஓட்டி வந்த நாமக்கல் திருமலைபட்டியை சேர்ந்த சின்னராசு என்பவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்து 670 யை பறிமுதல் செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த முட்டைகளை கேரளாவில் விற்றுவிட்டு வந்த லாரி டிரைவர் ராசிபுரத்தை சேர்ந்த ரமேஷ்பாபு என்பவர் உரியஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.5 லட்சத்து 54 ஆயிரத்து 260-யை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து இன்று காலை சுமார் 9 மணியளவில் கேரளாவுக்கு முட்டைகளை ஏற்றி சென்று விற்பனை செய்துவிட்டு வந்த லாரி டிரைவர் ராசிபுரத்தை சேர்ந்த குழந்தைவேல் என்பவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி மறைத்து வைத்திருந்த ரூ.7 லட்சத்து 40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கேரளாவில் இருந்து முட்டைகளை விற்பனை செய்து விட்டு நாமக்கல் செல்வதற்காக வந்த முட்டை லாரியை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

    இதில் முட்டை லாரியை ஓட்டி வந்த டிரைவர் சதீஷ்குமாரிடம் (32) இருந்து உரிய ஆவணங்கள் இன்றி முட்டை லாரியில் கொண்டு வந்த ரூ.4 லட்சத்து 42 ஆயிரத்து 850-யை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் பறிமுதல் செய்த ரூ.25 லட்சத்து 87 ஆயிரத்து 940-யை பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் சேந்தமங்கலம் அருகே உள்ள தண்ணீர் பந்தல் காடு பகுதியில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொன்டு சென்ற ரூ.66 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×