search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்கம்பி அறுந்து விழுந்து மாணவி படுகாயம்; கிராமமக்கள் சாலை மறியல்
    X

    சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

    மின்கம்பி அறுந்து விழுந்து மாணவி படுகாயம்; கிராமமக்கள் சாலை மறியல்

    • படுகாயமடைந்த சிறுமி கீர்த்தனா அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.
    • போராட்டம் 45 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கப்பூர் ஊராட்சி பாரதி நகரை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மகள் கீர்த்தனா (வயது 12) ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

    கப்பூர் கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக மின்கம்பி மிகவும் தாழ்வாக தொங்கிக் கொண்டிருப்பதாகவும், கம்பியில் பல இடங்களில் ஜாயிண்ட் அடித்து மின்விநியோகம் செய்யப்படுவதால், எப்போது வேண்டுமானாலும் விபத்து நேரிடும் அபாயம் உள்ளதால், உடனடியாக மின் கம்பியை சீரமைத்து தருமாறு கிராம மக்கள் பலமுறை மின்வாரியத்தினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் கப்பூர் கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கீர்த்தனா மீது இன்று காலை மின் கம்பி அறுந்து விழுந்தது.

    இதில் படுகாயம் அடைந்த சிறுமி கீர்த்தனா அதே இடத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் சிறுமியை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கப்பூர் கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் மின்கம்பியை சீரமைக்காத மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து மயிலாடுதுறை- திருவாரூர் சாலை மார்க்கத்தில் மங்கைநல்லூர் என்ற இடத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலை 10:30 மணிக்கு தொடங்கிய இப்போராட்டம் 45 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது. இதனால், இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனடியாக மின் கம்பியை சீரமைத்து தருவதாகவும் விரைவில் புதிய மின் கம்பங்களை அமைத்து மின் கம்பியை உயர்த்தி கட்டி தருவதாகவும் அளித்த உறுதி மொழியை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×