search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண் இருக்கும் வரை சி.பா.ஆதித்தனாரின் புகழ் நிலைத்திருக்கும்- வைகோ
    X

    மண் இருக்கும் வரை சி.பா.ஆதித்தனாரின் புகழ் நிலைத்திருக்கும்- வைகோ

    • உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை மனதில் பதியும் வண்ணம் தந்தவர் சி.பா.ஆதித்தனார்.
    • விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையோடு செய்திகளை வழங்கியவர் சி.பா.ஆதித்தனார்.

    நெல்லை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று நெல்லை வந்தார். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 42-வது நினைவு தினத்தையொட்டி நெல்லை மத்திய மாவட்ட ம.தி.மு.க. சார்பில் நெல்லை பாஸ்போர்ட் அலுவலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு வைகோ மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    அப்போது அவருடன் துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன், நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் நிஜாம் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் புகழ் அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்று உள்ளேன். சிங்கப்பூரிலே வழக்கறிஞராக இருந்து சிறப்பு பெற்று, லண்டனில் பத்திரிகை நிருபராக செயல்பட்டு சாதனை புரிந்தவர் அவர்.

    அந்த விதத்தில் பெரும்பொருள் ஈட்டி தமிழ்நாட்டில் பத்திரிகை ஆரம்பித்தார். மாலை முரசு பத்திரிகை அவர் தொடங்கியதுதான். அதன் பின்னர் தினத்தந்தி பத்திரிகை மூலமாக புரட்சியை ஏற்படுத்தியவர் சி.பா.ஆதித்தனார் ஆவார்.

    காலையில் எழுந்தவுடன் தந்தி, அதன் பின்னர் தான் காபி என்று சொல்லும் அளவுக்கு மாளிகைவாசி முதல் குடிசைவாசிகள் வரையிலும் அனைவரையும் பத்திரிகை வாசிக்க வைத்தவர் சி.பா. ஆதித்தனார்.உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை மனதில் பதியும் வண்ணம் தந்தவர். தமிழனுக்காக ஒரு பத்திரிகை வேண்டும் என தொடங்கியவர் அவர். இந்தியாவிலேயே அதிக மக்கள் வாசிக்கும் பத்திரிகையாக தினத்தந்தி திகழ்கிறது.

    தந்தை பெரியாரை அழைத்து சென்று தஞ்சையில் தமிழ் மாநாட்டை நடத்தினார். இதன் காரணமாக தனிச்சிறையில் வாடினார். சபாநாயகராக இருந்தபோது ஒவ்வொரு நாளும் திருக்குறளை வாசித்து தான் சட்டப்பேரவையை தொடங்க வேண்டும் என்ற மரபை ஏற்படுத்தியவர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார். என் திருமணத்தை முன்னின்று நடத்தியவர். விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையோடு செய்திகளை வழங்கியவர் சி.பா.ஆதித்தனார். மண் இருக்கும் வரை அவரது புகழ் நிலைத்திருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், முதலீட்டாளர் மாநாடுக்கு வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் வெற்றியோடு திரும்புவார். எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலை இல்லை. அதனால் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை குறை கூறி பேசுகிறார்கள். தனித்தமிழ் ஈழத்திற்கு உலக நாடுகளின் ஆதரவு பெருகும்.

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். மதுவிலக்கு வேண்டும் என்று தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டேன். எனது சொந்த கிராமத்தில் எனது தாயார் தலைமையில் மதுக்கடையை அடித்து நொறுக்கி அதனை திறக்க விடாமல் செய்தோம்.

    தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையில் 500 கடைகளை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தான் கள்ளச்சாராயம் தமிழகத்தில் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த ஆட்சியில் கள்ளச்சாராய விற்பனை பெருகியதன் விளைவாகவே தற்போது உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

    புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காதது மிகப்பெரிய தவறு. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறப்பது அரசியல் ஆகிவிடும். பாராளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    இந்த பேட்டியின்போது வைகோவின் டெல்லி உதவியாளர் செந்தூர்பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் மணப்படை மணி, செய்தி தொடர்பாளர் மின்னல் அலி, பகுதி செயலாளர்கள் கோல்டன் கான், பொன் வெங்கடேஷ், ஜோசப், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜான் கென்னடி, ஆறுமுகப் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×