என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் தீவிரம் அடையத் தொடங்கிய தென்மேற்கு பருவமழை
    X

    ஊட்டியில் தீவிரம் அடையத் தொடங்கிய தென்மேற்கு பருவமழை

    • ஜூன் 1-ந் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை தள்ளிபோனது.
    • நேற்று மதியம் 12 மணி முதல் இரவு வரை விட்டு விட்டு ஆங்காங்கே மழை பெய்து கொண்டே இருந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தாமதமாக தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.

    ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவ மழையும், அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழையும் பெய்யும். இதேபோல, ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை பெய்யும். நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தான் அதிக அளவில் பெய்யும்.

    அதன்படி, தென்மேற்கு பருவமழை சராசரியாக 700 மில்லி மீட்டர், வடகிழக்கு பருவமழை 300 மில்லி மீட்டர், கோடை மழை 230 மில்லி மீட்டர் பதிவாகும். ஆனால், கடந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக மழை பதிவானது.

    இதற்கிடையே ஜூன் 1-ந் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை தள்ளிபோனது. கூடலூர், பந்தலூர், குன்னூரில் சில இடங்களில் கடந்த வாரம் மழை பெய்தாலும், தொடர்ச்சியாக இல்லாமல் நின்றுவிட்டது.

    இந்நிலையில், ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரம் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது.

    நேற்று மதியம் 12 மணி முதல் இரவு வரை விட்டு விட்டு ஆங்காங்கே மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால், சாலைகளில் ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. லேசான மண் சரிவுகள் ஏற்பட்டன.

    குளிர் காற்று வீசியதால் பள்ளி, கல்லூரி மாணவிகள் அவதிக்குள்ளாகினர். இதேபோல், மதியம் முழுவதும் சாலைகளில் கடும் மேகமூட்டம் நிலவியது. ஊட்டி, குன்னூர், மசினகுடி, மஞ்சூர் செல்லும் சாலைகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி சென்றனர்.

    அதிகபட்சமாக நேற்று 21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்த பட்சமாக 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு 82 சதவீதமாக இருந்தது.இந்நிலையில், மாவட்டம் முழுவதும் தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்யும் என்று காலநிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    கீழ் கோத்தகிரி -60, சேரங்கோடு-29, அப்பர் பவானி-26, கேத்தி-24, ஊட்டி, அவலாஞ்சி, குந்தா -14, நடுவட்டம்-12. மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    Next Story
    ×